சிங்கப்பூரில் தமிழ் மொழியைப் பேண உறுதியுடன் செயல்பட வேண்டும்
சிங்கப்பூரில் தொடர்ந்து தமிழார்வத்தை வரும் தலைமுறைகளுக்குப் பேணிக் காக்க சமூகம் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.
நற்பணித் தமிழ்ப் பேச்சாளர் மன்றம், சிங்கப்பூர்த் தமிழ்ச்சொல்வேந்தர் மன்றம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) இணைந்து கொண்டாடிய மைல்கல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு டாக்டர் ஜனில் உரையாற்றினார்.
நற்பணி அமைப்பின் ஆலோசகருமான டாக்டர் ஜனில், “நமது முன்னோர்கள் சிங்கப்பூரின் இருமொழிக் கொள்கைக்காகவும் தமிழ் ஒரு தேசிய மொழியாவதற்காகவும் பாடுபட்டனர்,” என்று தெரிவித்தார்.
மூன்று தலைமுறைகளாகக் கடின உழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
“தமிழ் மீதான ஆர்வம், பற்று என்ற நேர்மறையான கண்ணோட்டத்துடன் தொடர்ந்து மொழி நிலைத்திருக்கக் கடினமாக உழையுங்கள்,” என்று தமிழ் இளையர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
அவருடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான டாக்டர் ஹமீது ரசாக், சிங்கப்பூர்த் தமிழின் தனித்துவத்தை எடுத்துக்கூறி, தொடர்ந்து அனைவரது தமிழ்ப் பணி சிறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“எங்குத் தமிழ் இளையர்கள் தங்கள் பங்கை அதிகம் செலுத்துகிறார்களோ, அங்கு நாம் அவர்களுக்கு ஆதரவையும் அதிகரிக்க வேண்டும்,” என்றார் அவர்.
மக்கள் கழகத் தலைமையகத்தில் நடைபெற்ற மைல்கல் நிகழ்ச்சி ‘தமிழ் முரசு’டன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
நிகழ்ச்சியின் ஒரு சிறப்பம்சமாக ‘தமிழை வாழ வைப்பது கல்வியா? கலாசாரமா?’ என்ற தலைப்பில் இரு அணிகள் கொண்ட ஒரு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராகத் ‘தமிழ் முரசு’ நாளிதழின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா. முத்து நடராஜன் பட்டிமன்றத்தை ஆக்கபூர்வமாக வழிநடத்தினார்.
“பட்டிமன்றங்கள் போன்ற தளங்கள், இளையர்களிடையே மொழிவளம், பேச்சாற்றல் போன்ற திறன்களைத் திறம்பட ஊக்குவிக்கின்றன,” என்றார் திரு சபா. முத்து நடராஜன்.
அத்துடன் மற்றோர் அங்கமாக, 10 இளையர்களுக்கு வெவ்வேறு தலைப்புகள் அளித்து திடீர்ப் பேச்சுப்போட்டியும் நடந்தது.
பணம், நட்பின் எதிர்பார்ப்பு, செயற்கை நுண்ணறிவு, மௌனம் போன்ற தலைப்புகளையொட்டி ஒரு நிமிடத்துக்குள் பேசிய இளையர்களை நடுவராக மதிப்பாய்வு செய்தார் ‘தமிழ் முரசு’ ஆசிரியர் த. ராஜசேகர்.
“மொழியார்வத்தை ஊக்குவிக்க நாங்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். மேலும் இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் அதனைத் தொடர்ந்து செய்வோம்,” என்றார் நற்பணித் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர் சந்திரகலா, 58.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரில் ஜூரோங் கிரீன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் துணைத் தலைவரும் காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியருமான மகாலிங்கம் உமா மகேஸ்வரி, 50, என்பவரும் ஒருவர்.
அனைத்துத் தலைமுறையினரையும் இணைக்கக்கூடிய மேலும் பல தமிழ் நிகழ்ச்சிகளைத் தமது செயற்குழு வழி ஆராய வேண்டும் என்ற தமது விருப்பத்தை அவர் தெரிவித்தார்.
“தொழில்நுட்பம், வாசிப்புப் பழக்கவழக்கங்கள், கலாசாரம் சார்ந்த உரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறப்பு,” என்றார் அவர்.