📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 07, 2026 05:02 PM

சமூக ஊடகங்கள் வாயிலாக தவறாக சித்தரிப்பது திமுகவினர் தான்; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

சமூக ஊடகங்கள் வாயிலாக தவறாக சித்தரிப்பது திமுகவினர் தான்; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

சென்னை: சமூக ஊடகங்கள் வாயிலாக தவறாக சித்தரிப்பது திமுகவினர் தான்; யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசியதாவது: சோஷியல் மீடியாவில் பெண்களை குறித்து மிக மிக கொச்சையாக, தவறாக பதிவுகளை வெளியிடுவதில் தவெகவை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதிலும் முதல்வர் விஜய் தயவு செய்து கவனத்தில் கொண்டு, தவெகவை சேர்ந்த உறுப்பினர்களையும் நிச்சயம் கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து, அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: எங்களுடைய தலைவர் முதல்வர் விஜய் சொன்னது எங்களுடைய கட்சியை சேர்ந்த அனைவருக்கும் சேர்த்து தான். யாராக இருந்தாலும் பெண்கள் குறித்து அவதூறாக பேசினாலும், எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஒரு சில பேர் எங்களுடைய கட்சியின் பேரில், திமுகவினர் பேக் ஐடி கிரியேட் பண்ணி அவதூறு பரப்பிக் கொண்டு இருப்பார்கள். பேக் ஐடி உருவாக்கி திமுகவினர் 10 வருடமாக என்ன செய்து கொண்டு இருந்தார்களோ அதை தான் இப்பொழுது செய்து கொண்டு இருக்கின்றனர். என் பெயரில் 4 ஐடி, உங்கள் பெயரில் 4 ஐடி உருவாக்கி அவதூறு பரப்பி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்திற்கு என்ன, என்ன சங்கடம் ஏற்படுத்தினார்களோ, அதை தான் எங்களுக்கும் செய்கிறார்கள்.

அதை எல்லாம் களையெடுத்து நாங்கள் எங்கெல்லாம் எந்த வழியில் தடுக்க முடியுமோ தடுத்து கொண்டு இருக்கிறோம். இந்த மாதரியாக சமூக ஊடகங்கள் வாயிலாக தவறாக சித்தரிக்கும் வேலையை பெரும்பாலும் திமுகவினர் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழக வெற்றிக்கழகத்தினர் யார் செய்தாலும் எப்பொழுதுமே கடுமையான நடவடிக்கை எடுக்க அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.