📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health July 16, 2026 02:34 PM

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: "ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது" என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லி ஜந்தர் மந்தரில் 19 நாட்களாக தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. "இந்தியக் குடிமகன் எவருடைய உயிரும் மிகவும் விலைமதிப்பற்றது" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் தடையின்றி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. NEET தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஜூன் 28 முதல் சோனம் வாங்சுக் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிக மோசமடைந்து வருவதால், அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு,"போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கை அரசு மருத்துவர்கள் தினமும் நேரில் சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில், அவருக்கு ஏதேனும் மருந்து அல்லது அவசரச் சிகிச்சை தேவைப்பட்டால் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு அதை வழங்க வேண்டும். ஒவ்வொரு மனித உயிரும் முக்கியமானது" என உத்தரவிட்டது.

உடல்நிலை அறிக்கை

சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை கண்காணித்து வரும் மூத்த பொது மருத்துவ நிபுணர் வியாழக்கிழமை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், வாங்சுக்கின் உடல் எடை 56.65 கிலோ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 28-ல் உண்ணாவிரதம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை 9 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடை குறைந்துள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சோனம் வாங்சுக்கின் உயிரைக் காக்கத் தேவைப்பட்டால் அவரை மருத்துவமனைக்கு மாற்றி, திரவ உணவு மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களைக் கட்டாயமாகச் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

மத்திய அரசின் உறுதியை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தினசரி மருத்துவக் கண்காணிப்பை உறுதி செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.