சொதப்பிய டி.ஆர்.பி.ராஜா... கடுப்பில் கட்சித் தலைமை! மாற்றத்துக்கு தயாராகும் தி.மு.க ஐடி விங்
சொதப்பிய டி.ஆர்.பி.ராஜா... கடுப்பில் கட்சித் தலைமை! மாற்றத்துக்கு தயாராகும் தி.மு.க ஐடி விங்
மாவட்டச் செயலாளர்கள் யாரைச் சொல்கிறார்களோ, அவர்கள்தான் மாவட்ட அளவிலான ஐடி விங் பொறுப்புகளுக்கு வர முடியும்.
‘தி.மு.க ஐடி விங் மொத்தமாகச் சொதப்பியதே, தோல்விக்கு முக்கியக் காரணம்’ என்று தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர் கட்சித் தலைமையிடம் புகார் வாசித்திருப்பதையடுத்து, தி.மு.க ஐடி விங்கில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள்!
நடந்து முடிந்த தேர்தலின்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் தீவிரப் பிரசாரங்களை மேற்கொண்டனர். கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் களத்தில் பம்பரமாகச் சுற்றிவந்தனர். ஆனால், களத்தில் பெரிதாகத் தலைகாட்டாமல் சமூக வலைதளங்களை மட்டுமே முதன்மையாகப் பயன்படுத்தி, எவருமே எதிர்பாராத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்!
இந்த நிலையில், ‘சமூக வலைதளங்களைத.வெ.க மிக நுட்பமாகப் பயன்படுத்திக்கொண்ட வேளையில், தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணி என்ன செய்துகொண்டிருந்தது?’ என்ற கேள்வி தி.மு.க-வினர் மத்தியில் எழுந்திருக்கிறது. இதற்கு பதில் கூறும்விதமாகக் கட்சியின் சீனியர் மாஜிக்கள் சிலர், தி.மு.க தலைவரைச் சந்தித்து “கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரான டி.ஆர்.பி.ராஜாவின் சொதப்பலான செயல்பாடுகளால்தான் நாம் இந்த அளவுக்கு மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறோம். இது குறித்து விசாரணை நடத்தி, இனியாவது சமூக வலைதளங்களில் த.வெ.க-வுக்கு நாம் ஈடுகொடுக்க வேண்டும்’ என மனம் வருந்திப் பேசியிருக்கிறார்கள். தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா குறித்து மாஜிக்கள் எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளைக் கேட்டு கொதிநிலைக்குப் போய்விட்டாராம் ஸ்டாலின்.
இது குறித்து நம்மிடம் பேசிய அறிவாலய விவரப்புள்ளிகள், “ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் எக்ஸ் தள பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு தி.மு.க ஐடி விங்கின் செயல்பாடுகள் சுருங்கி விட்டன. தி.மு.க கூட்டணியின் 234 வேட்பாளர்களின் களப் பணிகளையும் சமூக வலைதளப் பிரசாரங்களாக மாற்றியிருக்க வேண்டிய அணி, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சுகளைக்கூட மக்களிடையே முழுமையாகக் கொண்டுபோய் சேர்க்கவில்லை.
‘எங்கள் மாவட்டத்தில் ஐடி விங் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பதுதான் 50-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களின் கருத்தாக இருக்கிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஐடி விங்கை எக்ஸ் தளத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தினாரே தவிர, இன்ஸ்டா பக்கம் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. பொதுவாக எதிர்த்தரப்பு நகர்வு என்ன என்பதைக் கூர்மையாகக் கவனித்திருக்கவேண்டிய அணி, அதிலும் அப்பட்டமாகத் தோற்றுப்போயிருக்கிறது. த.வெ.க-வின் சமூக வலைதள ஆதிக்கம் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கடைசி 10 நாள்களில் கணித்திருந்தால்கூட த.வெ.க-வின் விஸ்வரூப வெற்றியை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்” என்கின்றனர் வருத்தத்துடன்.
தி.மு.க ஐடி விங் தொய்வடைந்ததன் பின்னணி குறித்து விசாரித்தபோது, “டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சராக என்றைக்குப் பொறுப்பேற்றாரோ, அன்றிலிருந்தே ஐடி விங்கை லெஃப் ஹேண்டில்தான் டீல் செய்யத் தொடங்கினார். தொழில்துறையையும் பார்த்துக்கொண்டு, மன்னார்குடித் தொகுதியையும் பார்த்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் மொத்தமாகக் கோட்டைவிட்டுவிட்டார் ராஜா.
தி.மு.க-விடம் இருக்கும் ஐடி விங் கட்டமைப்பு மாதிரி வேறு எந்தக் கட்சியிடமும் கிடையாது. ஒரு மாநிலச் செயலாளர், 20 துணைச் செயலாளர்கள் தலைமையில் மாவட்டம்தோறும் செயலாளர்களும், துணைச் செயலாளர்களும் இருக்கின்றனர். ஆனால் இதில் பிரச்னை என்னவென்றால், இவர்களில் 75% பேர் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர்கள் கிடையாது. 95% பேருக்கு ‘இன்ஸ்டாகிராம் அல்காரிதம்’ என்றால் என்னவென்றே தெரியாது. அணியின் நிர்வாகிகளின் நியமனத்திலும் எக்கச்சக்கக் குளறுபடிகள்.
மற்றொரு மிகப்பெரிய பிரச்னை, `பென்’ நிறுவனத்தின் தலையீடு. ஐடி விங் ஒரு முடிவெடுத்து மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, களத்தில் வேட்பாளர்களுடன் நிற்கும் `பென்’ நிர்வாகிகள், வேறொரு யுக்தியைச் சொல்லி குழப்பியடித்திருக் கிறார்கள்” எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கினர் ஐடி விங் நிர்வாகிகள் சிலர்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமானவர்கள், “டி.ஆர்.பி. ராஜா வசமிருந்து தகவல் தொழில்நுட்ப அணியை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் அமைச்சர்கள் சிலர் முன்வைத்திருக்கிறார்கள். தி.மு.க தலைவரும் அதற்கு இசைவு தெரிவித்துவிட்டதால், விரைவில் ஐடி விங்கில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன’’ என்றனர்.