📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 30, 2026 10:33 AM

“சொடக்கு சத்தம் கேட்டால் பேட்ஸ்மேன் அவுட்டு”.. கிளிக்கி பாண்டிங் விவகாரத்தில் வீரர் சஸ்பெண்ட்

“சொடக்கு சத்தம் கேட்டால் பேட்ஸ்மேன் அவுட்டு”.. கிளிக்கி பாண்டிங் விவகாரத்தில் வீரர் சஸ்பெண்ட்

“சொடக்கு சத்தம் கேட்டால் பேட்ஸ்மேன் அவுட்டு”.. கிளிக்கி பாண்டிங் விவகாரத்தில் வீரர் சஸ்பெண்ட்

லண்டன்: இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அரங்கேறியுள்ள ஒரு வினோத ஏமாற்று வேலை, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியிலும், அதே சமயம் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அந்த மோசடியை அரங்கேற்றிய வீரருக்கு நெட்டிசன்கள் வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா? 'கிளிக்கி பாண்டிங்'

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சில முறை பந்து பிட்ச் ஆகி கேட்ச் பிடித்த போதும் அது உண்மையான கேட்ச் போலவே நடித்து அம்பயரிடம் அவுட் கேட்பார். அதை நையாண்டி செய்யும் விதமாக, இந்த வீரருக்கு 'கிளிக்கி பாண்டிங்' (Clicky Ponting) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார்?

இங்கிலாந்தில் உள்ளூர் அளவில் நடைபெற்ற சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் நார்டன் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டைக் கடந்து சென்ற நொடியில், அருகில் நின்ற ஃபீல்டரான பிரையன் டிவைன் பந்து பேட்டின் விளிம்பில் பட்டது போன்ற சத்தத்தை உண்டாக்கத் தன் விரல்களால் பலமாக 'சொடக்கு' போட்டார்.

இந்த சொடக்கு சத்தத்தைக் கேட்டு, பேட்ஸ்மேன் பந்தை தொட்டு எட்ஜ் ஆகி விட்டது என்று அம்பயர் நம்பிவிட்டார். கீப்பர் கையில் பந்து தஞ்சமடைந்ததும், அம்பயர் உடனடியாக அவுட் கொடுத்துவிட்டார். பேட்ஸ்மேன் பந்து பேட்டில் படவே இல்லை என முறையிட்டும் அம்பயர் கேட்கவில்லை.

அம்பயரை ஏமாற்றி விக்கெட் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, எக்ஸ் தளத்தில் மட்டும் 75 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்ததை தொடர்ந்து, சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் நிர்வாகம் பிரையன் டிவைனை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சால்ட்பர்ன் கிளப், "இது மிகவும் வருத்தமளிக்கும் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய விவகாரம்" என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த சீசன் மற்றும் எதிர்கால போட்டிகளில் விளையாட அந்த வீரருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்து வீசியோ, சரியாக ஃபீல்டிங் செய்தோ விக்கெட் எடுக்க முடியாமல், இப்படி சொடக்கு போட்டு விக்கெட் எடுக்கும் 'திறமைசாலிகள்' கிரிக்கெட்டிற்கு தேவையா என்று நெட்டிசன்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.