சர்வதேச வணிகத்தில் இந்திய பிராண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் விருப்பம்
திருப்பூர்: 'வெளிநாட்டு பிராண்டுகளுக்காக உற்பத்தி செய்யாமல், இந்திய 'பிராண்டு'களை சர்வதேச அளவில் பதிவு செய்ய வேண்டும்' என, திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களை ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) முயற்சியால், ஒட்டுமொத்த பின்னலாடை தொழில் பாதுகாப்புக்காக, கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர், டில்லி சென்று, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய வர்த்தக அமைச்சர் பீயூஷ் கோயல், ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோரை சந்தித்தனர்.
மத்திய அமைச்சர்களிடம், பின்னலாடை உட்பட, ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்தனர். 'சைமா' சங்க நிர்வாகிகளை சந்தித்த ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், திருப்பூர் உற்பத்தியாளர்கள், சொந்த 'பிராண்டு' உருவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 'சைமா' தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''பிராண்டிங் குறித்து ஜவுளித்துறை அமைச்சர் அதிக ஆர்வத்துடன் கேட்டறிந்தார். மொத்த உற்பத்தியாளர்களில், 10 சதவீதம் பேராவது, 'பிராண்டிங்' உருவாக்க வேண்டும். வெளிநாட்டு பிராண்டுகளுக்காக உற்பத்தி செய்யாமல், சொந்த பிராண்டு உருவாக்க வேண்டும்.
''சர்வதேச சந்தையிலும், 'பிராண்டு' பதிவு செய்து, விரிவான வர்த்தகம் செய்ய மத்திய அரசு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதி அளித்துள்ளார். விரைவில், திருப்பூர் வந்து, தொழில்துறையினரை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்,'' என்றார்.