📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 17, 2026 08:34 AM

சதம் அடித்தும் நீக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்.. மீண்டும் ODI அணியில் வாய்ப்பு.. மனம் மாறிய பிசிசிஐ

சதம் அடித்தும் நீக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்.. மீண்டும் ODI அணியில் வாய்ப்பு.. மனம் மாறிய பிசிசிஐ

சதம் அடித்தும் நீக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்.. மீண்டும் ODI அணியில் வாய்ப்பு.. மனம் மாறிய பிசிசிஐ

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

ருதுராஜ் கெய்க்வாட் தான் கடைசியாக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி போட்டியில் 105 ரன்கள் குவித்து தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். சதம் அடித்த போதும், அதற்கு அடுத்ததாக வந்த இங்கிலாந்து தொடரில் அவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் கழற்றிவிடப்பட்டார். இந்திய உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் 15 சதங்களுடன் 58-க்கும் அதிகமான பேட்டிங் சராசரி வைத்திருக்கும் அவர் தொடர்ச்சியாக பல ஒருநாள் தொடர்களில் இருந்து நீக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுள்ளதால், மிடில் ஆர்டரில் 4-வது பேட்டிங் வரிசையை பலப்படுத்த ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வுக்குழு மீண்டும் அழைத்துள்ளது. மேலும், இந்தத் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியையும் ருதுராஜ் கேப்டனாக வழிநடத்த உள்ளார்.

இந்திய அணிக்காக இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ், 1 சதம் மற்றும் 1 அரைசதத்துடன் 228 ரன்கள் எடுத்துள்ளார். வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து ரோகித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையைக் கட்டமைக்க ருதுராஜ் கெய்க்வாட் மிக முக்கியமான வீரராகப் பார்க்கப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் தனது ஃபார்மை நிரூபிக்கும் பட்சத்தில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான இடம் நிரந்தரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பினால் ருதுராஜ் கெய்க்வாட் மாற்று வீரர் என்ற இடத்தை தான் பிடிக்க முடியும்.