சட்டசபையில் சபாநாயகர் நீக்குவது ரீல்ஸ் ஆகிறது: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றச்சாட்டு
சென்னை : ''சட்டசபையில் சபாநாயகர் நீக்கும் வார்த்தைகள், 'யூ டியூப்' மற்றும் சமூக வலைதளங்களில், 'ரீல்ஸ்' ஆக பரப்பப்படுகின்றன'' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: ஆளும் கட்சியினர் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதை சபாநாயகர் நீக்குகிறார். சட்டசபை வரலாற்றில், எதிர்க்கட்சியினர் பேசியதை விட ஆளும் கட்சியினர் பேசியதை, அதிகம் நீக்குவது, இதுதான், வரலாற்றில் முதல்முறை.
சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆளும்கட்சியினர், ஆச்சரியம், அதிசயப்படும் வகையில், பதில் தருகின்றனர். பாட்டெல்லாம் பாட ஆரம்பித்துள்ளனர்.
நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், சபாநாயகர் நீக்கும் வார்த்தைகள், 'யூ டியூப்' மற்றும் சமூக வலைதளங்களில், 'ரீல்ஸ்' ஆக பரப்பப்படுகின்றன. அதனால், சபாநாயகர் நீக்குவதற்கு, அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: த.வெ.க., ஆட்சியில் தான் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தி.மு.க., 2021ல் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி நேரடி ஒளி பரப்பை செய்யவில்லை.
அமைச்சர் ஆனந்த்: நேற்று மார்க்கெட்டில், 70வயது முதியவர் ஒருவரை பார்த்தேன். 'இப்போதெல்லாம், 'சீரியல்' பார்ப்பதில்லை. சட்டசபை நிகழ்ச்சிகளை, நேரடியாக குடும்பத்துடன் பார்க்கிறோம். உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறது' என்றார்.
சபாநாயகர் பிரபாகர்: கருத்துகளை சொல்லும் போது, அந்த கருத்தையொட்டி, பாட்டு பாடுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
அமைச்சர் நிர்மல் குமார்: ஜோதிடம் பார்த்து, மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம், தமிழகம் பார்த்தது. எந்த நடவடிக்கையை, எப்போது எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். துறைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டு, சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
உதயநிதி: இதைத்தான் குறிப்பிட்டேன். ஒரு கேள்வி கேட்டால், நாங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு, அதிசயப்படும் அளவிற்கு, பதில்கள் வருகின்றன. கேள்வி நேரத்தை, முதலில் நேரடி ஒளிபரப்பு செய்தது நாங்கள் தான்.
தி.மு.க., ஆட்சியில், தினமும், 10 கேள்விகள் எடுக்கப்பட்டன. அது, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்போது சபை குறிப்பில் இருந்து, சபாநாயகர் நீக்குவது, 'ரீல்ஸ்' ஆக பரப்பப்படுகின்றன.
சபாநாயகர்: சட்டசபையில் நீக்கப்பட்ட காட்சி, ஒரு மீடியாவில் ஒளிபரப்பப்பட்டதாக எதிர்க்கட்சி தரப்பில் கடிதம் தரப்பட்டுள்ளது. இது, உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்கபடும்.
அமைச்சர் ராஜ்மோகன்: சட்டசபையில் நடப்பது, மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவே, நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இங்கு சினிமா, 'பஞ்ச்' வசனங்கள் தவிர்த்து, ஆக்கபூர்வமாக பேசினால், சட்டசபை சிறப்பாக செயல்படும்.
உதயநிதி: நேரடி ஒளிபரப்பை நாங்கள் பாராட்டுகிறோம். அதிலுள்ள பிரச்னைகளை சொல்கிறோம். இப்போது நீங்கள் நீக்கியதாக கூறியதும், நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சபாநாயகர்: வார்த்தைகளை நீக்குவது, எனது தனிப்பட்ட உரிமை. எல்லா பேச்சையும் நீக்குவது, எனது நோக்கம் இல்லை. சபைக்கு உதவாத, சபையின் மாண்பை குறைக்கும் வார்த்தைகளை நீக்குவேன்.
சபையின் கண்ணியத்தை காக்கும் வகையில், வார்த்தைகளை நீக்காமல் இருக்கும்படி, எம்.எல்.ஏ.,க்கள் பேசவேண்டும்; ஆதாரமில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.