சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஒரே நாளில் 8 பேர் வெட்டிக்கொலை: தமிழ்நாட்டை உலுக்கும் தொடர் படுகொலைகள்
சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஒரே நாளில் 8 பேர் வெட்டிக்கொலை: தமிழ்நாட்டை உலுக்கும் தொடர் படுகொலைகள்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கான பகிரங்கச் சாட்சியாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து 8 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எங்கும் ரத்தக்களறியாக காட்சியளிக்கும் தமிழகத்தில், மக்களின் உயிருக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத அவல நிலை உருவாகியுள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழ்நாடு முழுவதுமே குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிட்ட நிலையில், ஆளும் அரசும் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற அச்சமும், கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குற்றவாளிகளுக்கு காவல்துறையின் மீது எந்த பயமும் இல்லை என்பதற்கு மதுரையில் நடந்துள்ள சம்பவங்களே சாட்சி. காவல் நிலையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு அருகிலேயே அடுத்தடுத்து உயிர்கள் துடிதுடிக்கப் பறிக்கப்பட்டுள்ளன. மதுரை சோலை அழகுபுரம் பிரதான சாலையில் சரவணன் என்பவர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி அறிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
இதைவிட அதிர்ச்சியாக, மதுரை மேலூர் காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே 50 வயதான சரவணன் என்பவரும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், மேலூர் அரசுப் பள்ளி அருகே செல்லத்துரை என்ற இளைஞரும் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே சர்வசாதாரணமாக கொலைகள் நடக்கிறது என்றால், சாமானிய மக்களுக்கு இனி எங்குதான் பாதுகாப்பு என்ற பீதி எழுந்துள்ளது.
தலைநகர் சென்னையிலும் ரவுடிகளின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது. சென்னை புறநகரான குன்றத்தூர் அருகே தண்டவாளத்தில் ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ் என்பவரின் தலையில் கல்லைப் போட்டு நசுக்கிக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதேபோல தாம்பரத்தில் வெல்டிங் தொழிலாளியான ஜெய்சங்கர் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க, கிருஷ்ணகிரி அருகே உள்ள மதுபான பார் ஒன்றில், காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்து அதற்கான வெறும் 10 ரூபாயைக் கேட்ட அருண்குமார் என்ற இளைஞரை, பார் உரிமையாளர் ஈவிரக்கமின்றி அடித்துக் கொலை செய்துள்ளார்.
தமிழகத்தில் மனித உயிர்களின் மதிப்பு வெறும் 10 ரூபாயாகக் குறைந்துவிட்டதா எனச் சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர். இதுமட்டுமின்றி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஒரு இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். கரூரில் 17 வயது சிறுமி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைகள் ஒருபுறம் இருக்க, விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி ஷாஜகான் உள்ளிட்ட இருவர் மீது கொடூரமான முறையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஒரு பெண்ணை எரித்துக் கொல்லும் துணிகர முயற்சியும் அரங்கேறியுள்ளது. மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து அரங்கேறும் இந்த கொடூரச் சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அரசு, வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதை நிறுத்திவிட்டு, உடனடியாக இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை ஒடுக்காவிட்டால், தமிழ்நாடு முழுவதும் விரைவில் வன்முறைக் காடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.