சட்டம்
சட்டம்-ஒழுங்கு இனி ஆர்.டி.ஐ கீழ் வராது! தமிழ்நாடு அரசு அறிவிப்புக்கு வலுக்கும் கண்டனம்
சட்டம்-ஒழுங்கு என்ற பரந்த சொல்லைக் காரணம் காட்டி காவல்துறை தொடர்பான தகவல்களை ஒட்டுமொத்தமாக ஆர்.டி.ஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்குவது நியாயமானதல்ல என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Published : September 27, 2026 at 12:12 PM IST
சென்னை: ஆர்.டி.ஐ (RTI) 2005-இன் கீழ் இருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ள உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்பான பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பொருந்தாது எனத் தமிழ்நாடு ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு துறையின் கீழ் வருபவை
சட்டம்-ஒழுங்கு பிரிவின் கீழ் மதம் மற்றும் சாதி மோதல்கள் தொடர்பான விவகாரங்கள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான விசாரணை ஆணையங்களை அமைத்தல் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் மீதான தொடர் நடவடிக்கைகள் உள்ளிட்டவை கையாளப்படுகின்றன.
மேலும், COFEPOSA Act மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் தடுப்புக் காவல் நடவடிக்கைகள், தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பிரதிநிதித்துவ மனுக்கள், அவர்கள் சார்பில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் உள்ளிட்டவையும் இந்த பிரிவின் கீழ் வருகின்றன.
ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் நடத்துதல், காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பான விசாரணை அறிக்கைகளைப் பரிசீலித்தல், காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்கள், காவல்துறை சித்ரவதை மற்றும் ரிமாண்ட் கைதிகளின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தொடர்பான விவகாரங்கள், சட்டம்-ஒழுங்கு மற்றும் வகுப்புவாத சம்பவங்கள் குறித்த மாதாந்திர அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்புதல், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தல் ஆகிய பணிகளும் இடம்பெறுகின்றன.
மாணவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டோரின் போராட்டங்கள் தொடர்பான விவகாரங்கள், அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரும் மனுக்கள், மதம் மற்றும் சாதி மோதல்கள், அரசியல் மற்றும் மாணவர் போராட்டங்கள் உள்ளிட்டவையும் சட்டம்-ஒழுங்கு பிரிவால் கையாளப்படுகின்றன.
மேலும், அவதூறான கட்டுரைகள், செய்தி அறிக்கைகள், பேச்சுகள் உள்ளிட்டவற்றுக்காக வழக்குத் தொடர்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரங்களும் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன.
காவல்துறை அரசாக மாற்றும் முயற்சி
இதுபோன்ற சூழலில், சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்களை ஆர்.டி.ஐ கீழ் பெற முடியாது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் உள்ளதாக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள்.காவல் மரணங்கள் நடக்கின்றன.மாணவர் போராட்டங்களை ஒடுக்க கல்வித்துறைக்கு… pic.twitter.com/30RNisRZWQ
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் மட்டுமே விலக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்குமாறு உத்தரவிடுகின்றனர். காவல் மரணங்கள் நிகழ்கின்றன. மாணவர் போராட்டங்களை ஒடுக்குமாறு கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை போலீசார் கைது செய்கின்றனர். நியாயமான போராட்டங்கள் வன்முறை மூலம் ஒடுக்கப்படுகிறது.
இதுபோன்ற சூழலில், ஆர்டிஐயில் இருந்து சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை விலக்குவது கடும் கண்டனத்திற்குரியது. இது தமிழ்நாட்டை "காவல்துறை அரசாக" மாற்றும் வெளிப்படையான முயற்சியாகும். எனவே, இதை அரசு திரும்பப் பெற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
திரும்ப பெற வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அவரது எக்ஸ் பக்கத்தில், “ஆர்.டி.ஐ கீழ் சட்டம்-ஒழுங்கு தொடர்பான தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கைதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் சட்டம்–ஒழுங்கு…
“சட்டம்-ஒழுங்கு” என்ற பரந்த சொல்லைக் காரணம் காட்டி காவல்துறை தொடர்பான தகவல்களை ஒட்டுமொத்தமாக ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்குவது நியாயமானதல்ல.
ஆர்டிஐ சட்டத்தின் வரம்பைக் குறைக்கும் இந்த நடவடிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். தகவல் பெறும் உரிமையை காங்கிரஸ் ஆதரிக்கிறதா, தமிழக அரசின் இந்த உத்தரவை ஏற்கிறதா என்பதை அக்கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை என்பது அரசின் சலுகை அல்ல; அது மக்களின் ஜனநாயக உரிமை” என பதிவிட்டுள்ளார்.