📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 03, 2026 12:04 AM

சட்டப்பேரவையை வழிநடத்திய முதல் பெண் மாற்று பேரவைத் தலைவர்... சத்யபாமாவுக்கு சபாநாயகர் பாராட்டு

சட்டப்பேரவையை வழிநடத்திய முதல் பெண் மாற்று பேரவைத் தலைவர்... சத்யபாமாவுக்கு சபாநாயகர் பாராட்டு

சட்டப்பேரவையை வழிநடத்திய முதல் பெண் மாற்று பேரவைத் தலைவர்... சத்யபாமாவுக்கு சபாநாயகர் பாராட்டு

மாற்று பேரவை தலைவர் சத்தியபாமா சட்டப்பேரவையை சிறப்பாக நடத்தியதை நான் பார்த்தேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என சபாநாயகர் ஜே.சிடி பிரபாகர் தெரிவித்தார்.

Published : September 2, 2026 at 4:12 PM IST

சென்னை: சட்டப்பேரவை வரலாற்றில் பேரவையை வழிநடத்திய முதல் பெண் மாற்று பேரவைத்‘ தலைவர் என்ற பெருமையை பெற்ற சத்யபாமாவை, சபாநாயகர் ஜே.சிடி பிரபாகர் வெகுவாக பாராட்டினார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக அக்கட்சியின் எழும்பூர் தொகுதி எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் நியமிக்கப்பட்டு பேரவையை வழிநடத்தி வருகிறார்.

பேரவை துணை தலைவராக துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் நியமிக்கப்பட்டு, பேரவையில் சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவர் அவையை வழிநடத்துகிறார்.

அந்த வகையில் பேரவை மாற்று தலைவர்களாக, தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணன், சத்யபாமா (தவெக), மதார் பதுருதீன் (தவெக), தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்), காதர் பாட்சா முத்துராமலிங்கம் (திமுக), தளவாய் சுந்தரம் (அதிமுக) ஆகிய 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையில் சபாநாயகர் அல்லது பேரவை துணைத் தலைவர் இல்லாத நேரங்களில் மாற்றுத் தலைவராக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் சட்டப்பேரவையை வழிநடத்துவது மரபு.

அந்த வகையில் பேரவையில் இன்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் இல்லாத நேரத்தில், திருப்பூர் சட்டமன்ற தவெக உறுப்பினர் சத்தியபாமா சிறிது நேரம் பேரவையை வழிநடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு பெண் மாற்று பேரவை தலைவர் அவையை வழிநடத்தியது இதுவே முதல் முறை.

திமுக பாராட்டு

இதுகுறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஒரு பெண் பேரவை தலைவராக அமர வேண்டும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பு. ஆனால் இப்போது மாற்றுத்தலைவராக எம்.எல்.ஏ சத்தியபாமா அமர்ந்திருப்பதை கண்டு பேரவையில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார். இதற்கு எம்.எல்.ஏ சத்தியபாமா நன்றி தெரிவித்தார்.

சபாநாயகர் வாழ்த்து

பின்னர் அவைக்கு வந்த பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர்,"மிகவும் சிறப்பாக அவையை வழிநடத்திய சத்தியபாமாவுக்கு வாழ்த்துக்கள் என்றும், மாற்று பேரவை தலைவர் சத்தியபாமா சட்டப்பேரவையை சிறப்பாக நடத்தியதை நான் பார்த்தேன். அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவ்வப்போது இப்படிப்பட்ட வாய்ப்புகள் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றவர்களுக்கு வழங்குவதன் மூலமாக, அவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் சட்டமன்ற உறுப்பினர்களின் பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்பும் அமையும்" என்று தெரிவித்தார்.

வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தவெக எம்எல்ஏ சத்யபாமா, "வரலாற்றுச் சிறப்புமிக்க சபாநாயகர் இருக்கையில் அமரும்போது கொஞ்சம் பதற்றம் இருந்தது. இருந்தபோதிலும் அது மகிழ்ச்சி அளித்தது; வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக இருந்தது; இதை தமிழ்நாட்டின் பெண்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆட்சியில் அனைத்தும் சாத்தியம், அனைத்தும் வளர்ச்சியாக இருக்கும்" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.