சுப்மன் கில் அதிவேக இரட்டை சதம் அடித்து நண்பன் இஷான் கிஷன் உலக சாதனையை உடைத்தார்.. எவ்ளோ ரன்?
சுப்மன் கில் அதிவேக இரட்டை சதம் அடித்து நண்பன் இஷான் கிஷன் உலக சாதனையை உடைத்தார்.. எவ்ளோ ரன்?
குவஹாத்தி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 406 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், வெறும் 117 பந்துகளில் இரட்டை சதம் விளாசி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் நெருங்கிய நண்பன் இஷான் கிஷனின் உலக சாதனையை உடைத்தார்.
குவஹாட்டியில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த சுப்மன் கில், 38.2வது ஓவரில் விட்டல் லாவ்ஸ் வீசிய பந்தில் ஒற்றை ரன் எடுத்து தனது 2வது சர்வதேச இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் தனது நண்பன் இஷான் கிஷன் 126 பந்துகளில் அடித்திருந்த அதிவேக இரட்டை சத உலக சாதனையை சுப்மன் கில் தகர்த்தெறிந்தார்.
சுப்மன் கில் - 117 பந்துகள் vs வெஸ்ட் இண்டீஸ், குவஹாத்தி (2026) இஷான் கிஷன் - 126 பந்துகள் vs வங்கதேசம், சட்டோகிராம் (2022) கிளென் மேக்ஸ்வெல் - 128 பந்துகள் vs ஆப்கானிஸ்தான், வான்கடே (2023) பதும் நிசாங்கா - 136 பந்துகள் vs ஆப்கானிஸ்தான், பல்லேகலே (2024) கிறிஸ் கெய்ல் - 138 பந்துகள் vs ஜிம்பாப்வே, கான்பெர்ரா (2015)
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டை சதங்களை விளாசிய 2வது பேட்டர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் ரோஹித் சர்மா மட்டுமே 3 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலக்கை துரத்தும் போது இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையும் கில் வசமாகியுள்ளது. இதற்கு முன் 2023 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே சேஸிங்கில் இரட்டை சதம் அடித்திருந்தார்.
117வது பந்தில் இரட்டை சதத்தை எட்டியதும் சுப்மன் கில் காற்றில் துள்ளி குதித்து தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். பின்னர் தனது ஹெல்மெட்டை கழற்றி பேட்டின் கைப்பிடி மீது வைத்து, இந்திய டிரெஸ்ஸிங் ரூமை நோக்கி கம்பீரமாக உயர்த்திக் காட்டினார். இந்திய வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்களது இளம் கேப்டனுக்கு கரகோஷம் எழுப்பி பாராட்டினர். களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஓடிவந்து கில்லை கட்டிப்பிடித்து வாழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 405 ரன்கள் குவித்த போதே, சிறிதும் பதற்றமடையாத சுப்மன் கில் புன்னகையுடன் ஆடுகளத்திற்கு பேட்டிங் செய்ய வந்தார். அந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கையை களத்தில் முதல் பந்திலிருந்தே காட்டிய கில், தான் ஏன் உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேன் என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளார்.