சவுதியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; இந்திய தூதரகம்
ரியாத்: ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரியாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பதற்றமான சூழல் நிலவி வரும் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்காக, உதவி எண்களை அறிவித்து பல நடவடிக்கைகளை இந்திய தூதரகம் எடுத்து வருகிறது.
தற்போது, சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று இந்திய தூதரக அதிகாரி விபுல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது; சவுதி அரேபியாவில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தசூழலில், சவுதி நாட்டு மக்கள் மற்றும் அரசுக்கு துணை நிற்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம், எனக் கூறினார்.
ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில்; சவுதியில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், புனித பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் பயணத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட விபரங்களை வழங்கி, தூதரக உதவியை நாடலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.