📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 24, 2026 09:33 PM

CJP: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் தாண்டி தொடரும் போராட்டம்

CJP: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் தாண்டி தொடரும் போராட்டம்

CJP: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் தாண்டி தொடரும் போராட்டம் - இதற்கு என்ன முத்திரை குத்துவார்கள்?

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு ‘மதச் சாயம்’, விவசாயிகள் போராட்டத்துக்கு ‘காலிஸ்தான்’ முத்திரை, தேசியத் தேர்வு தோல்விகள், முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்துக்கு என்ன முத்திரை? என்ன சாயம்?

மாணவர்களுக்கான தேர்வுகளைக்கூட நம்மால் சரியாக நடத்த முடியவில்லையே என்று, தவறுகளுக்குப் பொறுப்பேற்று தாமாகவே அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அல்லது, பதவி விலகுங்கள் என்று குரல் வந்த பிறகாவது அவர் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், பதவி விலகவில்லை. மாறாக, இந்தப் பிரச்னைக்காக ஜனநாயக ரீதியில் போராடும் இளைஞர்கள், மாணவர்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை நிகழ்த்துகிறது.

ஆணி பதித்த லத்திகளைக் கொண்டு மாணவர்கள், மாணவிகளின் மண்டைகளை காவல்துறையினர் உடைக்கும் காட்சிகள் காணொளிகளாக சமூகவலைதளங்களில் நிரம்பியிருக்கின்றன. மாணவிகளை ஆண் காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடிக்கும் காணொளிகள் காணக்கிடக்கின்றன. பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொலைவெறியோடு அடித்து நொறுக்குவது போல நம் சொந்த நாட்டு மாணவ, மாணவிகளை அடித்துநொறுக்கும் காணொளிகள் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

காவல்துறையினரின் தாக்குதலில் மண்டை உடைந்து, எலும்புகள் முறிந்து, கடுமையான காயங்களுடன் பல மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது எந்தளவுக்கு பலபிரயோகம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை ஒரு பொருட்டாகவே காவல்துறையினர் கருதியதாகத் தெரியவில்லை.

பா.ஜ.க அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் ஓராண்டுக் காலத்துக்கு மேலாக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்துக்கு அடிபணிந்த பா.ஜ.க அரசு, தான் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்தது.

அப்படியொரு போராட்டத்தைத்தான் தற்போது இளைஞர்களும், மாணவர்களும் டெல்லியில் முனனெடுத்துவருகிறார்கள். நீட் வினாத்தாள் கசிவு உட்படக் கல்வி மற்றும் தேசியத் தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக இருக்கிறது.

தற்போது, வேலையின்மை பிரச்னை இந்தியாவில் தீவிரமடைந்திருப்பதாகப் பொருளாதார வல்லுநர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய மக்கள்தொகையில், சுமார் 30 கோடிப் பேர் ஜென் சி இளைஞர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் சிறிய பகுதியினருக்குத்தான் நிலையான வேலைவாய்ப்பு இருக்கிறது. மீதமுள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள், வேலைவாய்ப்பின்மை அல்லது போதுமான வேலை இல்லாமை என்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

பெரும்பாலான இடங்களில் ஒப்பந்த வேலைகளே அதிகம். தகவல் தொழில்நுட்பத் துறையில்கூட 40 வயதைக் கடந்த பிறகு வேலையில் நிலைத்தன்மை இல்லை என்ற பிரச்னை நிலவுகிறது. ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. அவற்றை நிரப்புவதற்கான சிந்தனையும் முனைப்பும் மத்திய அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில்தான், ‘ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு வழங்கினாரே..’ என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியோ, பா.ஜ.க தலைவர்களோ, இந்த விமர்சனத்துக்குப் பதில் சொல்வதே இல்லை.

உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதாகப் பெருமையுடன் கூறிவரும் பா.ஜ.க-வினர், ‘வேலையின்மை என்பது இந்தியாவின் மிக முக்கியமான சமூக-பொருளாதாரச் சவால்களில் ஒன்றாக இருக்கிறது என்பது பற்றிப் பேச மறுக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாகத் தரமான வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்பதே பல பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

அதனால், அவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். பிரதமரிடம் நியாயம் கேட்க நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயல்கிறார்கள். போராடும் அந்த இளைஞர்களையும், மாணவர்களையும் அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்பதற்கு மாறாக, காவல்துறையைக் கொண்டு அவர்களை அடித்துநொறுக்குகிறார்கள்.

தலைநகர் டெல்லியில் தொடங்கிய இந்தப் போராட்டம் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களுக்குப் பரவியிருக்கிறது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற போராட்டமாகவும் இது மாறியிருக்கிறது. சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தின் மூலம் தொடங்கிய இந்தப் போராட்ட இயக்கத்தின் தலைமை இளைஞர்களின் கைகளுக்கு மாறியிருக்கிறது.

இந்தப் போராட்டத்தை காவல்துறையைக் கொண்டு அடக்குவதற்கு பா.ஜ.க முயல்கிறது. இதற்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம், பா.ஜ.க அரசு பெரும் சவாலாக மாறியது. அந்தப் போராட்டத்தை மத ரீதியான போராட்டமாக மத்திய ஆட்சியாளர்கள் சித்தரித்தனர். அதேபோல வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை ‘காலிஸ்தான் ஆதரவாளர்களின் போராட்டம் என்று விமர்சித்தனர். ஜே.என்.யு உள்ளிட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின்போது, தேசவிரோதிகள், நகர்ப்புற நக்சலைட்டுகள் என்றும் அந்த மாணவர்கள் மீது முத்திரை குத்தினார்கள்.

தற்போதைய போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வேலைவாய்ப்பை எதிர்நோக்குகிற, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிற இளைஞர்களாக இருக்கிறார்கள். நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதி, மதம், மொழி, மாநிலம் போன்ற எல்லைகளைக் கடந்து இளைஞர்களின் வாழ்க்கையை நேரடியாகத் தொடும் பிரச்னைகளை முன்வைத்து நடைபெறும் போராட்டமாக இது இருக்கிறது. இந்தப் போராட்டத்துக்குச் சாதி, மத சாயம் பூசினால் அது எடுபடாது.

தொடர்ச்சியாகத் தேர்வுத் தாள்கள் கசிவதற்கும், தேர்வு முறைகேடுகளுக்கும் யார் பொறுப்பு என்ற கேள்விக்கோ, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்கோ அரசிடம் பதில் இல்லை. போராட்டத்தினரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காத, அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத மத்திய அரசு, போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிடுகிறது.

இந்த நிலையில், போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும் பல அரசியல் கட்சிகளும் கண்டனக் குரல்களை எழுப்பிவருகின்றன. தமிழகத்தை ஆளும் த.வெ.க-வும் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ‘தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையால் குண்டுக்கட்டாகத்த தூக்கிச் சென்று கைது செய்தது, ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை ஒன்றிய அரசு முழுவதுமான ரத்து செய்ய வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் த.வெ.க வலியுறுத்தியிருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்களை த.வெ.க கண்டிக்கிறது. ஆனால், டெல்லியில் மாணவர்களிடம் காவல்துறை எப்படி அடக்குமுறையில் ஈடுபட்டதோ, அதைப்போலத்தான் சென்னையில் போராடிய மாணவர்களிடம் தமிழகக் காவல்துறை நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.