📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 12, 2026 10:03 PM

எஃப்சிஆர்ஏ மசோதா.. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு.. மத்திய அரசு நடவடிக்கை!!

எஃப்சிஆர்ஏ மசோதா.. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு.. மத்திய அரசு நடவடிக்கை!!

எஃப்சிஆர்ஏ மசோதா.. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு.. மத்திய அரசு நடவடிக்கை!!

கடந்த 1976-ம் ஆண்டு வெளி​நாடு​களில் இருந்து இந்​திய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்​பப்​படும் நன்​கொடைகளை வரன்​முறைப்​படுத்தும் நோக்கில், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி FCRA (Foreign Contribution Regulation Amendment) என்ற சட்டத்தை கொண்டு வந்தார். இந்தியாவில் உள்ள தனி நபர்களும் சங்கங்களும் பெறும் வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவை இந்திய இறையாண்மைக்கு இணங்க செயல்படுவதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

இந்தச்சூழலில் தான், இந்த சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி பாஜக எஃப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்திருந்தது. வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பயன்படுத்தப்பட்டாலோ அல்லது நக்ஸல் தீவிரவாதத்துக்கு உதவும் விதமாக பயன்படுத்தப்பட்டாலோ அதை தடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. ஆதலால் தேசப் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, அதற்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டியதிருப்பதாலேயே இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

எனினும், இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு வக்ஃபு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அவர்களின் சொத்துக்களை பிடுங்கிய பாரதிய ஜனதா கட்சி, இப்பொழுது கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை அடித்துப் பிடுங்குவதற்கு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இப்பொழுது இந்தச் சட்டத்தின் மூலம் கிறிஸ்துவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை எடுக்கும் அளவிற்குச் செல்லும் என்ற குற்றச்சாட்டை திமுக முன்வைத்திருந்தது.

இதற்கிடையில் தான், கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், FCRA திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வந்தது. ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்தான தீர்மானத்தில், ”மக்களவைச் சபாநாயகரால் பரிந்துரைக்கப்படும் 21 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவைத் தலைவரால் பரிந்துரைக்கப்படும் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு இந்த மசோதாவை ஆய்வு செய்யும்.கூட்டுக்குழுவின் கூட்டத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை, மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்காக (1/3) இருக்க வேண்டும்.

இந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு, தனது விரிவான ஆய்வு அறிக்கையை 2026 குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தீர்மானத்தின் மூலம், மக்களவை தனது பரிந்துரையை மாநிலங்களவைக்கு வழங்கி, கூட்டுக்குழுவில் இணையுமாறும் அதன் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.