📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 08, 2026 07:33 PM

“எஃப்சிஆர்ஏ மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்”

“எஃப்சிஆர்ஏ மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்”

சென்னை: “சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு எஃப்சிஆர்ஏ (FCRA ) மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே திரும்பப்பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் இடம்பெற்ற, கழக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையிலான சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழு மன்றத்தின் பிரதிநிதிகள், 6.8.2026 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.

2026 மார்ச் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்சிஆர்ஏ திருத்தச் சட்ட முன்வரைவு 2026-ஐத் திரும்பப் பெறவும், எஃப்சிஆர்ஏ சட்டத்தின் பிரிவு 15-ஐ நீக்கவும் அல்லது அதற்கு மாற்றாக, இச்சட்ட முன்வரைவையும், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவும் உள்துறை அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்ட முன்வரைவின் பாரதூரமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அதன் விதிகளைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, மன்றத்தின் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.