📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 02, 2026 06:30 PM

E20 Petrol: லிட்டருக்கு ரூ.30 வரை மிச்சமா? மத்திய அரசு விளக்கம்

E20 Petrol: லிட்டருக்கு ரூ.30 வரை மிச்சமா? மத்திய அரசு விளக்கம்

E20 பெட்ரோல் பயன்படுத்தப்படுவதால் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் 30 ரூபாய் வரை மிச்சம் ஏற்படுவதாக மத்திய அரசு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. நாடுமுழுவதும் பெரும்பான்மையான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல்தான் பிரதானமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த எத்தனால் கலப்பு பெட்ரோலால் வாகன எஞ்சின்களில் பழுது ஏற்படும்; மைலேஜ் குறையும் என்பதோடு, பராமரிப்பு செலவும் அதிகரிக்கும் என்று வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களிலும் பெரிய விவாதங்களை கிளப்பி உள்ளது. இந்த புகார்களை மத்திய அரசு புறந்தள்ளி அவ்வப்போது விளக்கம் கொடுத்து வருகிறது.

இந்தநிலையில், E20 பெட்ரோலோல் நுகர்வோருக்கு பெரிய அளவில் மிச்சம் ஏற்படுவதாக புதிய தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.30 வரை மிச்சம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், அண்மையில் அமெரிக்க-ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை எட்டியது. ஒரு பீப்பாய் 135 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விலை கணிசமாக உயர்ந்தது.ஆனால், எத்தனால் கலப்பு காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.30 வரை மிச்சம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.77 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், எத்தனால் கலப்பு இல்லை என்றால் லிட்டர் ரூ.125 வரை அதிகரித்திருக்கும். E20 பெட்ரோல் விற்பனை காரணமாக, பெட்ரோல் நுகர்வோருக்கு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.30 வரை சேமிக்க முடிந்தது என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக E20 பெட்ரோல் குறித்து கடும் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், இந்த புதிய விளக்கத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது. எத்தனால் தயாரிப்புக்காக ஏழை மக்களுக்கு வழங்கக்கூடிய உணவு தானியங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுத்துள்ளது. அதாவது, பொதுவினியோகத் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் உணவு தானியங்களின் கையிருப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே எத்தனால் உற்பத்திக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேலும், மனிதர்கள் உணவாக பயன்படுத்தும் அளவுக்கு தரமில்லாத உடைந்த அரிசி, தானியங்கள் மட்டுமே எத்தனால் தயாரிக்கு பயன்படுத்தப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எத்தனால் கலப்பு காரணமாக வாகன எஞ்சின்களில் பெரிய பாதிப்புகள் வராது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரத்தில், பிஎஸ்3 மாசு உமிழ்வு தரத்துடன் தயாரிக்கப்பட்ட பழைய வாகன எஞ்சின்களில் எரிபொருள் செல்லும் ரப்பர் குழாய் மற்றும் எஞ்சின் கேஸ்கெட்டுகளில் பாதிப்பு ஏற்படலாம். இதனை மாற்றினாலே போதுமானது.

மேலும், பழைய வாகனங்களில் மட்டும் மைலேஜ் 2 முதல் 6 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், பிஎஸ்6 ஃபேஸ்2 மாசு உமிழ்வு தரத்துடன் தயாரிக்கப்படும் வாகன எஞ்சின்களில் E20 பெட்ரோலால் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.