E20 பெட்ரோல் போட்டால் மைலேஜ் 6% வரை குறையுமா? மத்திய அரசு விளக்கம்
E20 பயன்படுத்தினால் பழைய வாகன எஞ்சின்களில் பிரச்னை ஏற்படும்; மைலேஜ் குறையும் என்ற விவாவதம் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், இதுதொடர்பாக முக்கிய விளக்கத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது பழைய வாகனங்களை வைத்திருப்பவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
E20 பெட்ரோல் குறித்த விவாதம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. E20 பயன்படுத்தினால் பழைய வாகனங்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வாகன உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்களும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
E20 பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பு செய்து விற்பனை செய்யப்படுவதால், வாகனங்களின் எஞ்சின் பாகங்களில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் மைலேஜும் குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
அண்மையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பதில் அளித்திருந்தார். அதில், "E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் பிஎஸ்6 ஸ்டேஜ்2 இணக்கமான வாகனங்களை தவிர்த்து அதற்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் குறையும்," என்று தெரிவித்திருந்தார். இது பழைய வாகன உரிமையாளர்களை கவலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் பழைய வாகனங்களில் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் நாடாளுமன்றத்தில் கூறி இருக்கிறார். இதுதொடர்பாக, எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில்,"E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகன எஞ்சின்களில் பிரச்னை ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களோ அல்லது புகார்களோ இதுவரை வரவில்லை.
அதேநேரத்தில், 2016ம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பிஎஸ்3 வாகனங்களின் எஞ்சின்களில் சில ரப்பர் குழாய்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டி இருக்கும். இது வாகனத்தை வழக்கமான பரிசோதனையின்போது மாற்றிக் கொள்ளலாம். பெரிய அளவில் எஞ்சினில் எந்த மாற்றங்களும் செய்ய வேண்டி இருக்காது," என்று தெரிவித்துள்ளார்.
அடுத்து, "E20 பெட்ரோலை பயன்படுத்தும்போது சில வாகனங்களில் மைலேஜ் 2 முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும். இந்த பாதிப்பு வாகனத்தின் வயது, தொழில்நுட்பம், எஞ்சின் வடிவமைப்பை பொறுத்து மாறுபடும்," என்று விளக்கமளித்துள்ளார்.
அதேநேரத்தில், இதனை ஒரே கோணத்தில் மட்டும் பார்க்கக்கூடாது. வாகன உற்பத்தியாளர்கள், அரசின் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட பரிசோதனைகளில் நீண்ட கால பயன்பாட்டின்போது எஞ்சினில் பாதிப்பு கண்டறியப்படவில்லை. எனினும், 2005 முதல் 2016 வரை தயாரிக்கப்பட்ட பிஎஸ்3 வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்தும்போது நீண்ட கால பயன்பாட்டில் சில உதிரிபாகங்களை மாற்ற வேண்டி வரலாம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
E20 பெட்ரோலில் எத்தனால் கலப்பு காரணமாக தொழில்நுட்ப ரீதியில் சில விஷயங்கள் மைலேஜ் குறைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. எத்தனாலின் ஆற்றல் அடர்த்தி பெட்ரோலைவிட சற்று குறைவாக இருக்கும். இதனால், மைலேஜில் சிறிய அளவு குறையும் என்று கருதப்படுகிறது. அதேநேரத்தில், போக்குவரத்து நெரிசல், சாலையின் நிலை, வாகனப் பராமரிப்பு, டயரில் காற்றழுத்தம் மற்றும் ஓட்டும் முறை உள்ளிட்ட பல காரணிகள் மைலேஜ் குறைவதற்கு முக்கியமாக இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும், E20 பயன்படுத்தும்போது நாட்டிலுள்ள கோடிக்கணக்கான வாகனங்களில் எஞ்சின் விரைவில் பழுதடைந்துவிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலையும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மறுத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வாகனங்களும் E20 பெட்ரோலை பயன்படுத்த முடியும். சில வாகனங்களில் மைலேஜில் சிறிய வேறுபாடு ஏற்படலாம் என்றும் அரசு கூறி இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் E20 பயன்படுத்தும்போது வாகனங்களை சரியான இடைவெளியில் பரிசோதனை செய்வதால் சில தேவையற்ற பிரச்னைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.