📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 13, 2026 05:33 AM

ED உடன் கைக்கோர்க்கும் விஜிலென்ஸ்? நேருவுக்கு ‘Double ட்ரபிள்’?

ED உடன் கைக்கோர்க்கும் விஜிலென்ஸ்? நேருவுக்கு ‘Double ட்ரபிள்’?

ED உடன் கைக்கோர்க்கும் விஜிலென்ஸ்? நேருவுக்கு ‘Double ட்ரபிள்’?

தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வரும் கே.என். நேருவைச் சுற்றி, தற்போது விசாரணை வளையம் இறுகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக நேரு இருந்த காலகட்டத்தில், சுமார் 1,020 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகாரை அடிப்படையாகக் கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 4-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

அதிலும்... எஃப்.ஐ.ஆரில் நேருவின் பெயர் ‘ஏ1’ ஆக இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுவதுதான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்.

இந்த வழக்கில் நேருவைத் தவிர, அவருடைய சகோதரர்களான மணிவண்ணன், ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், எபினேசர் உள்ளிட்டோர் மற்றும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என மொத்தம் 13 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விசாரணை வட்டாரத்தில் பேசப்படும் இன்னொரு முக்கியமான பெயர் கவி பிரசாத். நகராட்சி நிர்வாகத்துறையில் வெளியாகவிருந்த டெண்டர்கள் குறித்த தகவல்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப ஒப்பந்ததாரர்களைத் தயார்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அதுமட்டுமல்ல, ஒப்பந்தத் தொகையில் 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் பணம் பெறப்பட்டதாகவும் விசாரணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக சில வாட்ஸ்அப் மற்றும் மெசேஜ் உரையாடல்கள் விசாரணை ஆவணங்களில் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அமலாக்கத்துறையிடம் உள்ள ஆவணங்களுடன், விஜிலென்ஸ் விசாரணையில் கிடைக்கும் தகவல்களையும் ஆவணங்களையும் அமலாக்கத்துறையிடம் பகிரத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாகத் தகவல். இதுதான் இப்போது தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில்தான் விஜிலென்ஸ் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது விஜிலென்ஸ் விசாரணையில் கிடைக்கும் தகவல்களும் மீண்டும் அமலாக்கத்துறையின் கவனத்துக்குச் செல்லும் பட்சத்தில், விசாரணை அடுத்த கட்டத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.ஒருபுறம் அமலாக்கத்துறை... மறுபுறம் லஞ்ச ஒழிப்புத்துறை... இரண்டு அமைப்புகளின் விசாரணையும் ஒரே விவகாரத்தை நோக்கி நகரத் தொடங்கினால், நேருவுக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நெருக்கடி அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேருவுக்கு வந்துள்ள இந்த டபுள் ட்ரபிள், தி.மு.க. தலைமையை நோக்கி நகருமா என்பதுதான் அடுத்த பரபரப்பு.

இப்போது நேருவைச் சுற்றி எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள்... வெறும் எஃப்.ஐ.ஆர். நிலையிலேயே நிற்குமா? அல்லது அடுத்தடுத்த விசாரணைகளால் இன்னும் பல பெயர்களும், ஆவணங்களும் வெளிவருமா? விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.