📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 12, 2026 08:04 PM

ஏஐ: இளம் ஊழியர்களின் வேலைவாய்ப்பை தகர்க்கக்கூடும்

ஏஐ: இளம் ஊழியர்களின் வேலைவாய்ப்பை தகர்க்கக்கூடும்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), வாழ்க்கைத் தொழிலின் அடிப்படை அனுபவத்தை உடைத்து, இளம் ஊழியர்களுக்குப் போதுமான பயிற்சி கிடைக்காமல் செய்துவிடக்கூடும் என்று அரசாங்கம் கவலை கொண்டுள்ளது என பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (அக்டோபர் 12) தெரிவித்தார்.

டிபிஎஸ் வங்கியின் ‘ஏஷியா ஃபியூச்சர் ஃபார்வர்ட்’ மாநாட்டில், டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி டான் சூ ஷானுடன் நடத்திய கலந்துரையாடலில் பேசிய திரு வோங், பல்வேறு துறைகளில் உள்ள இளம் ஊழியர்களின் பயிற்சி, வழிகாட்டுதல் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.

ஓர் இளம் அரசு ஊழியராகத் தமது மேலதிகாரிகளுக்காகக் குறிப்புகள் எடுத்தல், உரைகளை எழுதுதல், பட வில்லைப் படைப்புகளைத் தயாரித்தல் போன்றவற்றை திரு வோங் நினைவுகூர்ந்தார். மேலும், இந்தக் கற்றல் செயல்பாட்டில் மதிப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

“ஏஐ, அந்த வழக்கமான வேலைகள் அனைத்தையும் மாற்றிவிடும். ஆனால் அதிலிருந்து வரும் கற்றலைத் தானியக்கமயமாக்கி அகற்றிவிடாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும்,” என்று கூறிய அவர், இளம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் வழிகாட்டுவதிலும் முதலாளிகள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

“வாழ்க்கைத் தொழிலின் அடிப்படை அனுபவம் உடைந்திருக்கக்கூடும் என்றும் அதனால் இளையர்களுக்குப் போதுமான பயிற்சி கிடைக்காமல் போகக்கூடும் என்றும் நாங்கள் கவலைப்படுகிறோம்.

“நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வைப்பதற்குப் புதிய திட்டங்கள் தேவையா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, நிதி அமைச்சருமான திரு வோங் கூறினார்.

உற்பத்தித்திறன் நன்மைகளை அனுபவிப்பதற்காக, வேலையளிப்பவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது என்று திரு வோங் கூறினார்.

“ஆனால், வேலையளிப்பவர்கள் பயிற்சியில் கவனம் செலுத்துவதையும், அடுத்த தலைமுறையைத் தொடர்ந்து வளர்ப்பதையும் நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்,” என்றார் அவர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் சிங்கப்பூரின் ‘விட்டுக் கொடுக்க முடியாத கொள்கைகள்’ குறித்துக் கேட்கப்பட்டபோது, ஏஐயும் தொழில்நுட்பமும் அனைத்து சிங்கப்பூர் மக்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்று திரு வோங் கூறினார்.

“எந்த விலையைக் கொடுத்தாவது தொழில்நுட்பத்தை நாங்கள் புகுத்தவில்லை,” என்று அவர் மேலும் கூறினார். “நாங்கள் செயற்கை நுண்ணறிவால் மட்டுமே இயக்கப்படும் ஒரு சமூகமாக மாற முயற்சிக்கவில்லை. மாறாக, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மேம்பட்ட ஒரு சமூகமாகத் திகழவே முயற்சிக்கிறோம்,” என்றார்.

முக்கியமான அமைப்புகள், உணர்திறன் மிக்க தகவல்கள் அல்லது மனிதப் பொறுப்புணர்வு ஆகியவற்றில் சிங்கப்பூர் சமரசம் செய்துகொள்ளாது என்றும் முக்கியமான முடிவுகளை இறுதியில் மனிதர்களே எடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

திரு வோங்கும் திருமதி டானும் உலகச் சந்தையின் நிச்சயமற்ற தன்மை, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு மத்தியிலான எரிசக்தி விநியோகம், வர்த்தகங்கள், பிற நாடுகளுக்கு சிங்கப்பூர் கொண்டுள்ள முக்கியத்துவம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.