📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 08, 2026 09:34 AM

ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும்

ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும்

ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளம் மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்கும் வகையில், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து புனராய்வு செய்ய வேண்டும்

தஞ்சாவூர்: தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது; கல்வி, மருத்துவத்துறை நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு தஞ்சாவூர் வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை மக்களின் பெரிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாகவும், குறிப்பாக நாட்டின் எதிர்காலத் தூண்களான கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும் தஞ்சாவூர் வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தஞ்சாவூர் வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஆடிட்டர் ரவிச்சந்திரன் (அகில இந்திய வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பின் தென்மண்டல பகுதி சிறப்பு அழைப்பாளர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், ரூ.812 கோடி ஒதுக்கீடு போன்ற பல அறிவிப்புகள் வெறும் ஆடம்பரமான மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்களாகவே காட்சியளிக்கின்றன. மக்களுக்கு உடனடித் தேவையாக இருக்கும் அத்தியாவசிய அடிப்படைச் செலவுகளையும், தேவைகளையும் புறந்தள்ளிவிட்டு இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.

தற்போது சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளின் முடிவில் இதன் தாக்கம் சாமானிய மக்களின் பொருளாதாரத்தில் எந்த அளவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசு தொலைநோக்குப் பார்வையுடன் கணிக்கத் தவறிவிட்டது. மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்குப் போதிய, திடமான ஆதாரங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் சுட்டிக்காட்டப்படவில்லை. இதனால், எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி மேலும் உயர்ந்து, மக்கள் மீது கடுமையான நிதிச்சுமை சுமத்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

அதேபோல், வேலைவாய்ப்பைத் தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்திற்கு இந்த நிதிநிலை அறிக்கை எந்தவொரு உறுதியான உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. மாநிலத்தில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும் ஏற்ற சாதகமான சூழல் இதில் உருவாக்கப்படவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய அதிக கடன் சுமையைக் கடுமையாகச் சுட்டிக்காட்டி அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசு, தற்போது மீண்டும் கடனைப் பலமடங்கு அதிகரிப்பதற்கும், திட்டமிடப்படாத செலவுகளை மேற்கொள்வதற்கும் உத்தேசித்திருப்பது முரண்பாடாக உள்ளது. நாட்டின் அடிப்படை வளர்ச்சிக்கு மிக முக்கியமான கல்வித்துறைக்கும், ஏழை எளிய மக்களின் நல்வாழ்வைக் காக்கும் மருத்துவத்துறைக்கும் போதுமான நிதி ஒதுக்காமல், குறைந்த அளவே நிதி ஒதுக்கியிருப்பது சமூக நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

தவெக அரசின் முதல் பட்ஜெட்டே அனைத்து தரப்பினர் மத்தியிலும் கண்டனத்தை எழுப்பி உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டவை நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி