📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 17, 2026 09:34 PM

‘எமரால்ட் ஹில் 37’ மறுமேம்பாடு: ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு

‘எமரால்ட் ஹில் 37’ மறுமேம்பாடு: ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு

ஆர்ச்சர்ட் ரோடு மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எமரால்ட் ஹில் 37’ நிலப்பகுதியின் மறுமேம்பாட்டுக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் புதன்கிழமை (செப்டம்பர் 16) அழைப்பு விடுத்துள்ளது.

சிங்கப்பூர் சீனச் பெண்கள் பள்ளியின் பழைய வளாகமான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை, பாரம்பரியம் மாறாமல் புத்தாக்கம் மிக்க ஹோட்டலாகவும் வாழ்க்கைமுறை அனுபவங்களை வழங்கும் மையமாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

ஏறத்தாழ 1.04 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நிலப்பகுதி, சாமர்செட், எமரால்ட் ஹில் பாதுகாக்கப்பட்ட பகுதியில், ஆர்ச்சர்ட் ரோட்டின் பிரதான பகுதியிலிருந்து எளிதில் சென்றடையும் வகையில் உள்ளது.

உள்நாட்டு, அனைத்துலக குத்தகைதாரர்கள் தங்கள் திட்டப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி வரை ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வணிகம், விருந்தோம்பல் பயன்பாட்டுக்காக முதன்மையாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலப்பகுதி, 1.67 ஹெக்டர் மொத்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இத்திட்டம் 50 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதோடு, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.

இங்கு அமையவுள்ள பல்நோக்கு மேம்பாட்டு மையம், சிங்கப்பூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் புதிய பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவதுடன், அவர்கள் இங்கு தங்கும் நேரத்தையும் வருகையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுமுழுவதும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் பொதுமக்களுக்கான திறந்தவெளி இடங்களும் அதில் ஒருங்கிணைக்கப்படும்.

ஆர்ச்சர்ட் ரோட்டை உலகத்தரம் மிக்க வாழ்க்கை முறை மையமாக மாற்றுவதோடு, 2040ஆம் ஆண்டை நோக்கிய சிங்கப்பூரின் சுற்றுலா வளர்ச்சிக்கான இலக்கை அடைய ‘எமரால்ட் ஹில் 37’ ஒரு முக்கிய அடையாளமாகத் திகழும் என்று பயணத்துறைக் கழகத்தின் நிலம், கருத்துரு மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் அஷ்லின் லூ நம்பிக்கை தெரிவித்தார்.