📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 03, 2026 10:03 PM

“என் தந்தையின் தியாகத்துக்காக வெற்றியை சமர்ப்பிக்கிறோம்”

“என் தந்தையின் தியாகத்துக்காக வெற்றியை சமர்ப்பிக்கிறோம்”

கோவை விமான நிலையத்தில் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை வரவேற்ற நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் உள்ளிட்டோர்.

கோவை: “என் தந்தை செய்த தியாகத்துக்கு கைமாறாக அவருக்கு எங்கள் வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” என ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டியில் வெல்வது தனது அடுத்த இலக்கு எனவும் அவர் கூறினார்.

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த, வழுக்குப்பாறையில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்ராஜ் - மீனா தம்பதி. இவர்களது மகள் வித்யா ராம்ராஜ். ஜப்பானில் நடந்து முடிந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை அள்ளினார். மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 54.75 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தை வென்று, 42 ஆண்டுகால பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்தார்.

400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இவரது குழுவினர் பதக்கம் வென்றனர். போட்டிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் இன்று (அக்.3) கோவை திரும்பினார். கோவை விமான நிலையத்தில், அவரை நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

சாதனை படைத்தது மகிழ்ச்சியளிக்கிறது

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் கூறிய: “கோவையிலிருந்து சென்று இந்தியாவுக்காக விளையாடி சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியாகவும் உள்ளது. பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் எனக்கு அளித்த ஆதரவால் இந்நிலையை அடைந்துள்ளேன்.

கடந்த போட்டியைவிட இப்போட்டியில் கடுமையாக உழைத்தேன். 2023-ம் ஆண்டிலிருந்து சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி மேற்கொண்டேன். பதக்கத்தை இலக்காகக் கொள்ளாமல், நேரத்தை மேம்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது. தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் தொடர்ந்து முழுமையான ஆதரவு அளித்து வருகிறார். இளம் விளையாட்டு வீரர்கள், பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களை நம்பி தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முதல்வரிடமும் இது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஒலிம்பிக் போட்டியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பலர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு தயாராகி வருகிறேன்.

தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்

எங்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் மிகவும் கடினமாக இருந்தது. ஓட்டுநரான என் தந்தைக்கு பெரிய வருமானம் கிடையாது. அப்போதெல்லாம் ஓடுவதற்கு ஸ்பைக் ஷூக்கள் வாங்குவதே எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனக்கு ஷூ வாங்கித் தருவதற்காக என் அப்பா அவரது சாப்பாட்டை தவிர்ப்பார்.

மதிய உணவை தவிர்த்து, அதில் கிடைக்கும் பணத்தை சேர்த்து எனக்கு ஷூ வாங்கித் தருவார். அன்று அவர் பட்டினி கிடந்து எங்களை உருவாக்கியது தான், இன்று எங்களது குடும்பத்துக்கு புதிய வெளிச்சத்தை கொடுத்துள்ளது. என் தந்தை செய்த தியாகத்துக்கு கைமாறாக எங்களது வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” என்று அவர் கூறினார்.