📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 23, 2026 10:00 AM

என்றும் இளையராஜா... ஐந்து தசாப்த இசை பேரரசுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவுரவம் !

என்றும் இளையராஜா... ஐந்து தசாப்த இசை பேரரசுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவுரவம் !

என்றும் இளையராஜா... ஐந்து தசாப்த இசை பேரரசுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவுரவம் !

தமிழ்நாட்டில் கிராமத்தில் பிறந்து உலக இசை மேடையில் சாதனை படைத்த இளையராஜாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த சிறப்பு கவுரவம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, தனது இசையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த இசைஞானி இளையராஜாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பணியை பாராட்டும் வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்றத்தில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

50 ஆண்டுகால இசை சாதனைக்கு கவுரவம் :

தமிழ் திரையிசையில் புதிய பரிமாணத்தை உருவாக்கிய இளையராஜா, கடந்த பல ஆண்டுகளாக தனது தனித்துவமான இசையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

அவரது இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், விக்டோரியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டு இளையராஜாவின் கலைப் பங்களிப்பு கௌரவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு இளையராஜா நன்றி :

இந்த சிறப்பு கவுரவத்திற்கு நன்றி தெரிவித்து, இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், விக்டோரியா அரசாங்கத்தின் நிதி அமைச்சர் என்வர் எர்டோகன் எம்பி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

தனது 50 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளிப்பதாக இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தில் பிறந்த எனக்கு கிடைத்த பெருமை :

தனது உரையில் இளையராஜா, தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த தனக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ள இந்த கவுரவம் மிகவும் உணர்வுபூர்வமான தருணம் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது இசைக்கு ஆதரவாக இருந்த ரசிகர்கள், தன்னுடன் இணைந்து பயணித்த கலைஞர்கள் மற்றும் பல தலைமுறைகளாக தனது பாடல்களை ரசித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

உலக அரங்கில் தொடரும் இளையராஜாவின் இசைப் பயணம் :

தமிழ் சினிமாவை கடந்து இந்திய இசைத்துறையிலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இளையராஜா, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

அவரது இசை பங்களிப்புக்கு பல்வேறு நாடுகளிலும் பாராட்டுகள் கிடைத்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் இந்த கவுரவம் அவரது கலைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஆஸ்கர் போட்டியில் இளையராஜா இசையமைத்த திரைப்படம் :

இதற்கிடையில், 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் இந்தியா சார்பில் ‘கோந்தல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இலங்கை சார்பில் பங்கேற்கும் படமாக ‘ஆண்டனி’ (Anthony) திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சர்வதேச திரைப்பட மேடையிலும் அவரது இசைப் பயணம் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.