எந்த துண்டுச்சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல சபாநாயகர் பிரபாகர் காட்டம்
திருநெல்வேலி: ''எந்த துண்டுச் சீட்டுக்கும் அடிபணி யாமல், நடுநிலையோடு சட்டசபையை நடத்தி வருகிறேன்,'' என சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நேற்று அவர் கூறிய தாவது:
மனசாட்சிக்கும், கடவுளுக்கும் பயந்து, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் மாண்பையும் காப்பது என் பணி. சட்ட விதிகள் மற்றும் மரபுகளின்படியே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறேன். சட்டசபையில் கட்சி பாகுபாடின்றி, நடுநிலையோடு புதியவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கி வருகிறேன்.
ஒவ்வொரு நாளும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்குத் தான் அதிக நேரம் ஒதுக்கப்பட்டது.
முதல்வரின் பதிலுரையின் போது, அதை தடுக்கும் நோக்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூச்சல், குழப்பம் செய்தனர். அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி நின்றதும், சட்ட விதிகளுக்கு எதிரானது; எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் அமைதியாக, 'பாயின்ட் ஆப் ஆர்டர்' கேட்டிருந்தால் பேச வாய்ப்பு அளித்திருப்பேன். தி.மு.க., கொறடா வேலு பேச முழு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
எந்த துண்டுச்சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல. சட்டசபை விவாதம் தொடர்பான தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டு பெறுவது வழக்கம். ஆனால், சபையை நடத்துவதிலும், எம்.எல்.ஏ.,க்களை பேச அனுமதிப்பதிலும், யார் துண்டுச்சீட்டு கொடுத்தாலும் ஏற்க மாட்டேன்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நால்வர் ராஜினாமா விவகாரம், ஆய்வில் உள்ளது; முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. அடுத்த தேதியை நிர்ணயித்து, முறையான, விரிவான மற்றும் நேரடி விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
முதல்வரை மிரட்டும் விதமாக பேசியதாக, தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்டசபை உரிமைக்குழுவிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.