📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 28, 2026 10:33 PM

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியதில் இருந்து தினமும் ஒத்திவைப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 6-வது நாளான நேற்றும் இது நீடித்தது. கடந்த வாரம் முழுவதும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் வலியுறுத்தப்பட்டது. அவர் பதவி விலகினார்.

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடந்த 20-ந் தேதி மாணவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை மந்திரி பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி இரு அவைகளிலும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, மக்களவையில் பொதுத்தேர்வுகள் மசோதா மீதான விவாதத்தை முன்னெடுப்பதற்காக எதிர்க்கட்சிகளிடம் பேசப்பட்டதாக தெரிகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் சம்மதித்ததாகவும், எனவே, இன்று அது குறித்து விவாதம் நடைபெறும் எனவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு வழக்கம்போல் கூடியது. மக்களவையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அளியில் ஈடுபட்டனர்.

அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில். சபை செயல்படட்டும். விவாதமும் கலந்துரையாடலும் நடைபெறட்டும், அனைவரின் கருத்துக்களும் வெளிப்படுத்தப்படட்டும். நாடாளுமன்றத்தில் விவாதமும் கலந்துரையாடலும் நடைபெறுகின்றன என்ற நேர்மறையான செய்தி நாடு முழுவதற்கும் செல்லட்டும். என கூறினார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.