📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 29, 2026 12:01 AM

“எதிர்ப்பவர்களால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடிக்க முடியாது”

“எதிர்ப்பவர்களால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடிக்க முடியாது”

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மசோதாவை எதிர்ப்பவர்களால் அதை தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வரும் 30ம் தேதி கூட உள்ளது. டிசம்பர் 3 வரை இந்த சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா ஆகியவை இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் தனது அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நமது பெண் சக்திக்கு நாங்கள் ஒரு வாக்குறுதி அளித்திருந்தோம். அதை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது நான் நீண்டகாலமாக முன்னெடுத்து வரும் ஒரு போராட்டமாகும். பல பெண்கள் இந்த கோரிக்கையை எழுப்பி உள்ளனர். நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பெண்களின் ஆசிகளும் எனக்கு உள்ளன. இதற்கான பாதையில் வரும் ஒவ்வொரு தடையையும் நாங்கள் முறியடிப்போம். இதை எதிர்க்கும் எந்த ஒரு கட்சியாலும், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை ஒருபோதும் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெண்களுக்கு வலுவான பங்களிப்பை வழங்குவது மோடி அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளில் ஒன்று.

மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 132வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்ததன் மூலம், நாட்டின் பெண்கள் பல பத்தாண்டுகளாகக் காத்திருந்த அந்த நீண்ட எதிர்பார்ப்பு முடிவுக்கு வர உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் கீழ், மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுவது நிஜமாகப் போகிறது.

மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் கிடைப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் திட்டங்களை மேலும் உள்ளடக்கியதாக மாற்றும். அதேபோல், மக்களவையில் பெண்களின் பங்களிப்பு, கொள்கை உருவாக்கம், சட்டமியற்றுதல் மற்றும் தேசிய முன்னுரிமைகளைத் தீர்மானித்தல் ஆகியவற்றில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். ஆட்சியில் பெண்களை வலுவான பங்காளிகளாக்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்புக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.’ என கேட்டுக்கொண்டுள்ளார்.