📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 29, 2026 09:31 PM

EXCLUSIVE: காலத்தை வென்ற தாய்ப்பாசம்! 23 ஆண்டுகளுக்கு பிறகு மகனை சந்தித்த தாய்

EXCLUSIVE: காலத்தை வென்ற தாய்ப்பாசம்! 23 ஆண்டுகளுக்கு பிறகு மகனை சந்தித்த தாய்

EXCLUSIVE: காலத்தை வென்ற தாய்ப்பாசம்! 23 ஆண்டுகளுக்கு பிறகு மகனை சந்தித்த தாய் - கோவையில் நெகிழ்ச்சி

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுவன், இளைஞனாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தை விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு.

Published : July 29, 2026 at 3:56 PM IST

-BY எஸ்.சீனிவாசன்

கோயம்புத்தூர்: 23 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, பாகிஸ்தான் எல்லையில் 18 ஆண்டுகளாக கொத்தடிமையாக கஷ்டப்பட்டு ஒருவழியாக பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவன் எப்படி காணாமல் போனான்? 18 ஆண்டுகள் கழித்து இளைஞனாக எங்கு மீட்கப்பட்டான்? 3 ஆண்டுகள் கழித்து பெற்றோருடன் சேர்ந்தது எப்படி? என்பதை விளக்குகிறது இத்தொகுப்பு.

காணாமல் போன பிரகாஷ்

விருதுநகர் மாவட்டம், பூமாலைப்பட்டி ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியினர். இவர்களுக்கு பிரகாஷ், பிரபு என இரு மகன்கள் இருந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக இவர்கள் குடும்பத்துடன் கோவைக்கு குடிபெயர்ந்தனர். கவுண்டம்பாளையம் பகுதியில் இவர்கள் வசித்து வந்த நிலையில், மூத்த மகன் பிரகாஷ் 3ஆம் வகுப்பு வரை கவுண்டம்பாளையம் நகராட்சி பள்ளியிலும், சாய்பாபா காலனி அரசு உதவிபெறும் பள்ளியில் 4ஆம் வகுப்பும் படித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு பெற்றோருடன் ஏற்பட்ட சிறு சண்டையில் பிரகாஷ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் கழித்து பிரகாஷ் தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தான் சென்னையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு, அவரை பெற்றோரால் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரும் அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை.

இருப்பினும், பல இடங்களில் பிரகாஷை தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ஒருவேளை அவர் உயிரிழந்திருப்பார் என்று பெற்றோரும் உறவினர்களும் நினைத்திருந்து விட்டனர்.

காத்திருந்த டிவிஸ்ட்

இந்நிலையில் தான் கடந்த ஜூலை 1 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த செய்தியாளர் முத்தையா என்பவர் சுந்தரியை கண்டறிந்து அவரது மகன் பிரகாஷ் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள லச்ச்கானி என்ற இடத்தில் இருக்கும் அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டியின் காப்பகத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இறந்துவிட்டதாக தாங்கள் நினைத்த தங்களுடைய மகன் உயிருடன் இருப்பதைக் கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியர் பிரகாஷை கோவைக்கு அழைத்து வர முடிவு செய்தனர். அதற்காக, பிரகாஷின் சகோதரர் பிரபு மற்றும் சில உறவினர்கள் உடனடியாக பஞ்சாபில் உள்ள காப்பகத்துக்கு சென்றனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் அவரை அனுப்ப முடியாது என காப்பகத்தின் நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவிக்கவே, அவர்கள் ஏமாற்றத்துடன் கோவை திரும்பினர்.

உதவிய மாவட்ட ஆட்சியர்

பிரகாஷை எவ்வாறு தங்களுடைய மகன் என நிரூபிப்பது என்ற குழப்பத்தில் இருந்த சுந்தரிக்கு திடீரென அவர் கோவையில் உள்ள பள்ளியில் கல்வி பயின்றது நினைவுக்கு வந்தது. அந்த பள்ளி ஆவணங்களை வைத்து எப்படியாவது மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு, அவர் கோவை மாவட்ட ஆட்சியரை அணுகி நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் தனது மகனை மீட்டு வர உதவி செய்யுமாறு மனு அளித்தார்.

தாயாரின் பாசப் போராட்டத்தை உணர்ந்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர், பஞ்சாபிலிருந்து பிரகாஷை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். அதன்படி, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள லச்ச்கானி என்ற இடத்தில் இருக்கும் அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி நிர்வாகிகளுக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூலை 27) பிரகாஷின் தாயார் சுந்தரி, சகோதரர் பிரபு, செய்தியாளர் முத்தையா ஆகியோர் லச்ச்கானி என்ற இடத்தில் இருக்கும் அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டிக்கு சென்று அங்குள்ள சண்டிகர் தமிழ் சங்கத்தை அணுகி இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட சண்டிகர் தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜசேகரன், அங்குள்ள தன்னார்வலர்களுடன் இணைந்து காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பிரகாஷை காவல் துறையினர், மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் சுந்தரியிடம் ஒப்படைத்தனர்.

கண்ணீர்மல்க கட்டித் தழுவிய தாய்

23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனைப் பார்த்த சுந்தரி, பிரகாஷை கண்ணீர் மல்க கட்டியணைத்து கதறி அழுதார். இதனையடுத்து சண்டிகர் தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரகாஷ், தற்போது அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை நாளை கோவை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சண்டிகர் தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “கொத்தடிமையாக இருந்த தமிழ் பேசும் இளைஞர் ஒருவர் சமூக ஆர்வலர் மூலம் மீட்கப்பட்டு தங்களது காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தமிழில் பேசுவதால் விவரம் குறித்து விசாரித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் நாங்கள் அங்கு சென்று பிரகாஷை சந்தித்து பேசினோம். ஆரம்பத்தில் தான் எங்கு இருக்கிறோம், என்ன நடக்கிறது என்பது குறித்து புரியாமல் குழம்பி இருந்த பிரகாஷ், பின்னர், தன்னுடைய சொந்த ஊர் குறித்து தெரிவித்தார். அதனடிப்படையில் விருதுநகர் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டு கோவையில் இருந்த பிரகாஷின் தாய் சுந்தரி கண்டுபிடிக்கப்பட்டார்.

பிரகாஷ் குறித்து தகவல் தெரிவித்ததும், உரிய ஆவணங்களுடன் பஞ்சாப் வந்த சுந்தரியிடம், அவரது மகன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

கொத்தடிமையாக இருந்த பிரகாஷ்

23 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பிரகாஷ், எப்படியோ பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒருவரிடம் கொத்தடிமையாக விற்கப்பட்டுள்ளார். அங்கு அவரை இரும்பு சங்கிலியால் கட்டிவைத்து, அவருக்கு ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்து வந்துள்ளனர். மூன்று வேளை உணவு கொடுத்தால் தப்பி சென்று விடுவான் என்ற எண்ணத்தில் ஒருவேளை மட்டுமே உணவளித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டியின் நிர்வாகிகள், அங்கு சென்று பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டு வந்து காப்பகத்தில் மூன்று வருடங்கள் தங்க வைத்துள்ளனர். பின்னர் அவர் குறித்து எங்களுக்கு தெரியவந்த நிலையில் எங்களுடைய முயற்சியால் 23 ஆண்டுகளுக்கு பிறகு பிரகாஷ் அவரது தாயாரிடம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.