ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே
ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே-வுக்கு வருவதில் ஜாகீர் கானால் முட்டுக்கட்டை.. மும்பை இந்தியன்ஸ்க்கு சிக்கல்
சென்னை: 2027 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு மாற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக சில வாரங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
2026 ஐபிஎல் சீசன் முடிவடைந்ததிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை வர்த்தக முறையில் வாங்க முன்னணி அணிகள் போட்டி போட்டு வருகின்றன. வரும் நவம்பர் 15-ஆம் தேதியுடன் வீரர்களைத் தக்கவைக்கும் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில் அதிக முனைப்பு காட்டியது. ஆனால் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டிருப்பது இந்த வர்த்தகத்தில் திடீர் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஜாகீர் கான் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தில் இருந்தபோது, அவருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு மாறுவதில் முட்டுக்கட்டை உருவாகியுள்ளது. எனினும் புதிய நிர்வாகச் சூழலில் இந்த மனக்கசப்புகள் மாற வாய்ப்புள்ளதால், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்திற்கு முன் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்பட வேண்டும். ஒருவேளை சிஎஸ்கே அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என இரண்டு அணிகளுமே ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு வாங்க விரும்பவில்லை என்றால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்வார் என கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவால் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.
இதற்கிடையே ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது பிசிசிஐ. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நியூசிலாந்து தொடரை தவறவிட்டாலும், 2027 உலகக்கோப்பை திட்டத்தில் அவர் தவிர்க்க முடியாத வீரராக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவருக்கு தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு வருவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.