📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 19, 2026 09:34 AM

ஈசூனில் புதிய மூத்தோர் நல்வாழ்வு மையம் திறப்பு

ஈசூனில் புதிய மூத்தோர் நல்வாழ்வு மையம் திறப்பு

முழுநேரப் பராமரிப்பாளரான 71 வயது ரீட்டா ஜோசப்பிற்குப் பக்கவாதம் ஏற்பட்டு அவரது உடலின் வலப்பக்கம் கடுமையாக வலுக்குன்றியபோது பிறரின் பராமரிப்பை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

முன்னாள் தாதியான அவரால் பாத்திரங்களைக் கையாள்வது, போத்தல்களைத் திறப்பது போன்ற சாதாரணப் பணிகளைச் செய்ய முடியாமல் போனதால், கணவரின் உதவியைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அவர் வீட்டிற்குத் திரும்பிவந்து உதவி செய்யும்வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுறுசுறுப்பான உடற்பயிற்சி மூலம் மீண்டும் வலிமை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தபோதிலும், அச்சத்தால் சமூக உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்ல ரீட்டா தயங்கினார்.

ஆயினும், 2026 ஜூலையில் அந்நிலை மாறியது. ‘டச் கம்யூனிட்டி சர்வீசஸ்’ அமைப்பு, ஈசூனிலுள்ள புதிய மூத்தோர் நல்வாழ்வு மையத்தில் முதியோர்களுக்கான உடற்பயிற்சித் திட்டத்தில் சேர அவரை ஊக்குவித்தது.

அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட ‘டச்பாய்ண்ட் அட் ஈசூன்148’, 60 வயதை எட்டிய மூத்த குடிமக்கள் உடற்பயிற்சிக்கூடக் கருவிகளைப் பயன்படுத்துவதில் தன்னம்பிக்கையைப் பெறவும் படிப்படியாகச் சமூக உடற்பயிற்சிக் கூடங்களுக்கு மாறவும் உதவும் 6 வாரத் திட்டத்தை வழங்குகிறது.

‘வலுவாகத் தொடங்குங்கள், வலிமையாக இருங்கள்’ (Start Strong, Stay Strong) என்று அழைக்கப்படும் அத்திட்டம், உடற்பயிற்சி இயந்திரங்களை விளையாட்டு வடிவில் மாற்றி, முதியவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது புள்ளிகளை ஈட்டி, தங்கள் உடல் வலிமையைச் சோதிக்க ஊக்குவிக்கிறது.

மற்றொரு திட்டமான ‘டச் சென்ட்ரல் மூத்தோர் நல்வாழ்வு, சமுதாய ஒருங்கிணைப்புத் திட்டம்’ வழக்கமான செயல்பாடுகளுக்கு அப்பால் முதியோரின் முழுமையான நல்வாழ்வை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதியோரின் வாழ்க்கைக் குறிக்கோள்களைக் கண்டறியவும், தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் உதவும் திட்டங்கள் அதில் அடங்கும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இந்த முயற்சி டிபிஎஸ் அறநிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டிபிஎஸ் அறநிறுவனம் நாலரை ஆண்டுகளில் 1.5 மில்லியன் வெள்ளியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

பாதிக்கப்படக்கூடிய அல்லது தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்களுக்கு உதவும் வகையில், ‘டச் கம்யூனிட்டி சர்விசஸ்’ அடுத்த மூன்று ஆண்டுகளில் 700 முதியவர்களை நல்வாழ்வு ஊக்குவிப்பாளர்களாகத் தேர்வுசெய்து பயிற்சிளிக்கத் திட்டமிட்டுள்ளது.

புதிய மையத்தின் திறப்புடன் இந்த அமைப்பின் மூத்தோர் நல்வாழ்வு மையங்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. 2027ல் மேலும் மூன்று மையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

61 முதல் 96 வயது வரையிலான 17,000 முதியவர்களிடம் ‘சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்’ 2022ல் நடத்திய ஆய்வை டச் கம்யூனிட்டி சர்விசஸ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதில், 16 முதியவர்களில் ஒருவர் சமூகத்திலிருந்து விலகி இருப்பது தெரியவந்தது.

முதியோர் நல்வாழ்வு முயற்சிகளுக்கு நிதியளிப்பது மிகவும் அவசியம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது என்று அந்த சமூகச் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

மூத்தோர் நல்வாழ்வுத் திட்டம் சமூகத்தின் தேவைகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பதாகவும், புதிய மையத்திற்கான கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி முதியோர்க்கான மனநல ஆதரவும் வழங்கப்படும் என நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சையத் ஹருண் அல்ஹப்ஷி தெரிவித்தார்.

ஆறு வார உடற்பயிற்சித் திட்டத்தைப் பொறுத்தவரை, இது வாரம் இருமுறை நடத்தப்படுகிறது. மையம் திறக்கப்பட்ட முதல் ஆறு மாதங்களுக்கு, சேர்க்கைக் கட்டணமாக $20 வசூலிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பங்கேற்ற பிறகு தம்து அச்சமும் கவலையும் நீங்கியதாக ரீட்டா உணர்ந்தார்.

“இதற்குமுன் எந்த ஓர் உடற்பயிற்சிக்கூடத்திற்குள்ளும் செல்ல நான் மிகவும் அஞ்சினேன். அது எனக்கான இடம் இல்லை என்று நினைத்தேன். ஆனால் இப்போது அவர்கள் நமக்கு அளித்த பயிற்சியால் எந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கும் செல்லும் துணிவுபெற்றுள்ளேன்,” என்று அவர் கூறினார்.