ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் தற்காலிக நிறுத்தம்: ஹார்முஸ் நீரிணையில் மனிதாபிமான நெருக்கடி தீவிரம்
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் தற்காலிக நிறுத்தம்: ஹார்முஸ் நீரிணையில் மனிதாபிமான நெருக்கடி தீவிரம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த முடிவுக்கான காரணம் குறித்து வாஷிங்டன் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
CNN வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் தற்போது "தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அவை எப்போது மீண்டும் தொடங்கும் அல்லது மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்து எந்தக் காலக்கெடுவையோ விளக்கத்தையோ அவை வெளியிடவில்லை.
இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு ஊடகங்கள் மாறுபட்ட விளக்கங்களை வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணையை பன்னாட்டு கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பது தொடர்பாக, தெஹ்ரானில் ஓமான் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அப்பகுதியைச் சேர்ந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிபிஎஸ் (CBS) செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் வான்-பாதுகாப்பு ஏவுகணை இருப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக மூத்த ஆலோசகர்கள் எச்சரித்ததை அடுத்து, ஒரு பெரிய அளவிலான இராணுவத் தாக்குதலை முன்னெடுப்பதில்லை என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் முடிவு செய்ததாக தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times) செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில், ஹார்முஸ் நீரிணையில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருகிறது. ஆயிரக்கணக்கான வணிகக் கப்பல் மாலுமிகள் தற்போதைய மோதல்களின் காரணமாக வெளியேற முடியாமல், இந்த முக்கிய நீர்வழித்தடத்திலும் அதைச் சுற்றியும் சிக்கித் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் அலுவலகம் கூறுகிறது.
ஏறத்தாழ 400 கப்பல்களில் உள்ள 6,000 மாலுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக கடல்சார் அமைப்பு மதிப்பிட்டுள்ளது, அதே வேளையில் வளைகுடா முழுவதும் உள்ள சிறிய படகுகளில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த நெருக்கடியால், ஈரான் துறைமுகங்களில் உள்ள ஒன்பது கப்பல்களில் குறைந்தது 93 மாலுமிகள் ஊதியம், அத்தியாவசியப் பொருட்கள் அல்லது அவர்களது குடும்பத்தினருடனான தொடர்பு ஆகிய எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்ததில் இருந்து 17 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர் என்றும், இதில் அண்மைய வாரங்களில் ஏற்பட்ட ஐந்து மரணங்களும் அடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது இந்த நெருக்கடியால் அதிகரித்து வரும் மனித உயிரிழப்புகளை எடுத்துக்காட்டுகிறது.