இலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் போட்டிக்குத் தயார் என ரிலையன்ஸ் அறிக்கை
புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனம், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) வெளியிட்ட அறிக்கையில் ஒருபோதும் போட்டியைக் கண்டு அஞ்சியதில்லை என்று தெரிவித்துள்ளது.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான இலான் மஸ்க், ‘ஸ்பேஸ்எக்ஸ்’, ‘எக்ஸ்’ நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் கைப்பேசி சமிக்ஞை இல்லாத இடங்களுக்கும் செயற்கைக்கோள் வாயிலாக இணையத்தளச் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு முதல்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விரைவாக முடிக்கும் பணியில் ஸ்டார்லிங்க் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் திட்டத்தைப் பெரும் செல்வந்தர்கள் தடுப்பதாக முதலில் குற்றம்சாட்டிய இலான் மஸ்க், பின்னர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை நேரடியாகக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “அன்புக்குரிய பிரதமர் அம்பானி, நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான தலைவர் என்பதை உணராமல் இருந்ததற்காக என்னுடைய மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்திய மக்கள்மீது, உங்களது ஏகபோக சுரண்டலை மேற்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள், இருப்பினும், ஸ்டார்லிங்க் போட்டியிட அனுமதிப்பது குறித்து நீங்கள் பரிசீலிப்பீர்களா,” என்று சர்ச்சைக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வெள்ளிக்கிழமை காலை ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து நிறுவனங்களைப் போலவே, ரிலையன்சும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முதலீடுகளையும் புத்தாக்கங்களையும் வரவேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்திய அரசு குறிப்பிட்டபடி, இந்திய நிறுவனமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒரே நடைமுறையே பின்பற்றப்படுகிறது. ஜியோவின் செயற்கைக்கோள் சேவைகளுக்கான அனுமதிகளும் இன்னும் நிலுவையில் உள்ளன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“ரிலையன்ஸ் நிறுவனம் ஒருபோதும் போட்டியைக்கண்டு அஞ்சியதில்லை. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை யார் வழங்குகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான உண்மையான அளவுகோலாகவே நாங்கள் போட்டியைப் பார்க்கிறோம்,” என்றும் ரிலையன்ஸ் கூறியுள்ளது.
இந்த விவகாரத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, தவறானவை,” என்று விளக்கம் அளித்துள்ளது.