📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 09, 2026 08:00 AM

IND vs ENG 4வது டி20 போட்டியில் இந்தியா தோற்றால்.. 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த அதே மோசமான வரலாறு

IND vs ENG 4வது டி20 போட்டியில் இந்தியா தோற்றால்.. 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த அதே மோசமான வரலாறு

IND vs ENG 4வது டி20 போட்டியில் இந்தியா தோற்றால்.. 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த அதே மோசமான வரலாறு

நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு மோசமான வரலாறு மீண்டும் திரும்புவதுடன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு நெருக்கடி மேலும் அதிகரிக்கும். இந்திய அணி கடைசியாகத் தொடர்ந்து இரண்டு டி20 தொடர்களை இழந்தது 2019-ம் ஆண்டில்தான்.

அப்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் (விராட் கோலி இல்லாததால் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார்), அதனைத் தொடர்ந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது. தற்போது அயர்லாந்திடம் 0-2 எனத் தோற்ற இந்திய அணி, இங்கிலாந்திடம் 2 போட்டிகளில் தோற்று 0-2 எனப் பின்தங்கியுள்ளது. இதனால், 4-வது போட்டியில் தோற்றால் தொடரை இழப்பதுடன், 7 ஆண்டுகளுக்கு முந்தைய அதே மோசமான சாதனையை இந்தியா மீண்டும் படைக்க நேரிடும்.

தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பெற்ற ஒயிட்வாஷ் தோல்விகள், ரோஹித் மற்றும் கோலியின் டெஸ்ட் ஓய்வு விவகாரங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவரது முரட்டுத்தனமான நடத்தை என அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இத்தகைய சூழலில், இந்தத் தொடரையும் இழந்தால் கம்பீரின் மீதான விமர்சனம் இன்னும் அதிகரிக்கும்.

மறுபுறம், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இது மிகப்பெரிய சோதனையாக மாறியுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், கடைசி 7 போட்டிகளில் 6-ல் தோல்வியடைந்து பிளே-ஆஃப் வாய்ப்பை கோட்டைவிட்டார். தற்போது இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் தவித்து வருகிறார்.

தொடரை இழப்பதைத் தவிர்க்கவும், நடப்பு டி20 உலகக்கோப்பை சாம்பியன் என்ற கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் இந்திய அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால் 4-வது டி20 போட்டி இந்திய அணியின் மிக முக்கிய போட்டியாகப் பார்க்கப்படுகிறது.