IND vs SL: பயிற்சி கூட செய்ய முடியாத நிலையில் பேட்டிங் கோச் ஆக மாறி கற்றுக் கொடுத்த சுப்மன் கில்
IND vs SL: பயிற்சி கூட செய்ய முடியாத நிலையில் பேட்டிங் கோச் ஆக மாறி கற்றுக் கொடுத்த சுப்மன் கில்
கொழும்பு: இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, கேப்டன் சுப்மன் கில்லுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரால் பேட்டிங் செய்ய முடியாத நிலை இருந்தது. பயிற்சிப் போட்டியில் கூட அவர் பேட்டிங் செய்யவில்லை. இதை அடுத்து அவர் வலைப்பயிற்சியில் சக வீரர்களுக்கு 'பேட்டிங் கோச்' ஆக செயல்பட்டார்.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடக்கவுள்ளது. இதற்கிடையே நடக்கும் பயிற்சி போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை. கடந்த வியாழக்கிழமை பயிற்சியின் போது, அவரது வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி போட்டியில் இருந்து கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், கே.எல்.ராகுல் அணியை வழிநடத்தி வருகிறார். கில்லின் காயத்தை பிசிசிஐ மருத்துவக் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. களத்தில் விளையாடாவிட்டாலும், வலைப்பயிற்சியின் போது மானவ் சுதர், குர்னூர் பிரார், முகமது சிராஜ் ஆகிய பின்வரிசை வீரர்களுக்கு சுப்மன் கில் பேட்டிங் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இலங்கை தொடருக்கு முன்பாக இந்திய அணி பல வீரர்களின் காயத்தால் தவித்து வருகிறது. இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போது இடது முழங்காலில் காயமடைந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இத்தொடரில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் முழுவதுமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் காயத்தால் விலகி உள்ளார். முதுகுவலியால் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பும் விளையாட முடியாத சூழல் நிலவுகிறது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 48.15 சதவீத புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.