இந்திய டெஸ்ட் அணியில் திடீர் வாய்ப்பு பெற்ற சரன்ஷ் ஜெயின் யார்? 11 ஆண்டு கால உழைப்பின் பின்னணி
இந்திய டெஸ்ட் அணியில் திடீர் வாய்ப்பு பெற்ற சரன்ஷ் ஜெயின் யார்? 11 ஆண்டு கால உழைப்பின் பின்னணி
மும்பை: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 33 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் யார்? அவரது 11 ஆண்டுகால உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டம் மற்றும் சாதனைகளை பார்க்கலாம்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சரன்ஷ் ஜெயின், வலது கை ஆஃப்-ஸ்பின்னராகவும், இடது கை பேட்ஸ்மேனாகவும் செயல்படக் கூடியவர். 2014ஆம் ஆண்டு இறுதியில் தனது முதல் தர கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய இவர், 11 ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு தற்போது முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடை தசைப்பிடிப்பு காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்டில் விளையாட முடியாததால், இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகத் திகழும் சரன்ஷ் ஜெயின், 54 முதல்தர போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 10 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் அசத்தியுள்ள அவர், 2 சதங்கள், 14 அரைசதங்களுடன் 31.75 சராசரியில் 2,223 ரன்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 103 ரன்கள் ஆகும். மேலும், 47 லிஸ்ட் ஏ போட்டிகளில் 38 விக்கெட்டுகளும், 20 டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான 4 நாள் போட்டியில் சரன்ஷ் ஜெயின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்டமிழக்காமல் நின்று 70 ரன்கள் குவித்தார். இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இவரது இந்த சமீபத்திய ஆட்டம் தேர்வுக்குழுவினரைக் கவர்ந்துள்ளது. தற்போது அதே இலங்கை மண்ணில் தான் இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது என்பதால் சரன்ஷ் ஜெயினுக்கு நேரடியாக வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், 8வது விக்கெட் வரை பேட்டிங் வலுவாக இருக்க வேண்டும் என்ற தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வியூகத்திற்கு இவர் கச்சிதமாகப் பொருந்துகிறார். வாஷிங்டன் சுந்தருக்கு 100 சதவீதம் பொருத்தமான மாற்று ஆல் ரவுண்டராக இருப்பார் என்பதும் இந்த வாய்ப்புக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.