📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 10, 2026 07:03 PM

இந்தியா அதிக ஒலிம்பிக் பதக்கங்களை பெற இதுதான் வழி.. விளையாட்டு அறிவியலுடன் வரும் கேலோ இந்தியா 3.0!

இந்தியா அதிக ஒலிம்பிக் பதக்கங்களை பெற இதுதான் வழி.. விளையாட்டு அறிவியலுடன் வரும் கேலோ இந்தியா 3.0!

இந்தியா அதிக ஒலிம்பிக் பதக்கங்களை பெற இதுதான் வழி.. விளையாட்டு அறிவியலுடன் வரும் கேலோ இந்தியா 3.0!

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள கேலோ 3.0 திட்டத்தில் விளையாட்டு அறிவியல் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அது பற்றி மருத்துவர் தின்ஷா பர்திவாலா எழுதிய கட்டுரை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் தின்ஷா பர்திவாலா ஒரு முன்னணி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர் ஆவார். இவர் 2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் 2026 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வதற்கும், பதக்கத்தை தவறவிட்டு 4 வது இடத்திற்கு தள்ளப்படுவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் வெறும் 0.1 வினாடி அல்லது ஒரு மில்லிமீட்டர் அல்லது 100 கிராம் மட்டுமே. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் 2024 ஒலிம்பிக் தொடரில் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததால் பதக்க வாய்ப்பை இழந்தார்.

அனைத்து வீரர்களும் தங்களது திறமையிலும் உடற்தகுதியிலும் சிறந்தவர்களாக இருந்தாலும், இறுதி நேரத்தில் அவர்களின் மனநிலை, ஊட்டச்சத்து மற்றும் காலநிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் விதம் ஆகியவையே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இந்த சிறிய இடைவெளியைக் குறைத்து, 4 வது இடத்தில் உள்ள ஒரு வீரரை முதலிடத்திற்கு கொண்டு வர உதவுவதுதான் 'விளையாட்டு அறிவியல்' (Sports Science).

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சர்வதேச விளையாட்டு அரங்கில் வெற்றிகளை குவிக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. தனிநபர் சாம்பியன்களைக் கொண்டாடினோம், உள்கட்டமைப்பை மேம்படுத்தினோம், வீரர்களின் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். ஆனால், சர்வதேச அரங்கில் தொடர்ந்து பதக்கங்களை வெல்லும் ஒரு வல்லரசு நாடாக மாறுவதற்கு முறையான அறிவியல் அணுகுமுறை அவசியமாகிறது.

உலக அளவில் விளையாட்டுத் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், திறமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு அறிவியல் பூர்வமான பயிற்சிகளை வழங்குகின்றன. விளையாட்டுத் துறையில் உலகளாவிய வெற்றி என்பது வெறும் திறமையால் மட்டுமே கிடைப்பதில்லை. அது முறையான திட்டமிடல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டமைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவும் அத்தகைய ஒரு கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'கேலோ இந்தியா 3.0' திட்டமானது 9 முக்கிய உத்திகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பயிற்சி, உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மிக முக்கியமாக உள்ளது. அவை இரண்டும் மற்ற உத்திகளை இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. வரும் 2030 காமன்வெல்த் போட்டிகள் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதற்கான அடித்தளமாக இந்த திட்டம் அமைய உள்ளது.

கேலோ இந்தியா 3.0 திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீரரின் பயணத்தையும் பதிவு செய்ய ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் வீரர்களின் பதிவு, பயிற்சி, போட்டிகள், ஊட்டச்சத்து மற்றும் அவர்களின் மருத்துவ வரலாறு ஆகியவை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக கண்காணிக்கப்படும்.

ஒரு வீரர் ஒரு அகாடமியில் இருந்து மற்றொரு தேசிய முகாமிற்கு மாறும்போது, அவரின் முந்தைய காயங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விவரங்கள் விடுபடாமல் இருக்க இந்த டிஜிட்டல் முறை பெரிதும் உதவும். இதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வீரர்களின் உடல்நிலையை முன்கூட்டியே கணித்து காயங்கள் ஏற்படுவதைத்டுக்க முடியும்.

விளையாட்டு அறிவியல் என்பது ஏதோ ஒரு சில உயர் பிரிவு வீரர்களுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து நிலை வீரர்களுக்கும் தினசரி பயிற்சியில் ஒரு பகுதியாக மாற வேண்டும். உடற்பயிற்சி உடலியல், பயோமெக்கானிக்ஸ், ஊட்டச்சத்து, உளவியல், பிசியோதெரபி, உடல் வலிமை, கண்டிஷனிங் மற்றும் செயல்திறன் பகுப்பாய்வு ஆகியவை இணைந்து ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட தேவைக்கேற்ப பயிற்சி திட்டங்களை உருவாக்க வேண்டும்.

உளவியல் ரீதியான ஆலோசனைகள் வீரர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, இறுதிப் போட்டிகளில் பதற்றமின்றி விளையாட உதவும். அதேபோல, பயோமெக்கானிக்ஸ் பகுப்பாய்வு வீரர்களின் உடல் அசைவுகளைச் சீரமைத்து சிறந்த முடிவுகளைத் தர வழிவகை செய்யும்.

விளையாட்டு வீரர்கள் தங்களது உச்சகட்ட திறனை வெளிப்படுத்தும்போது காயங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், முறையான உடலியல், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி அறிவியல் மூலம் கடுமையான காயங்கள் ஏற்படுவதை பெருமளவு தடுக்க முடியும். வீரர்களின் பணிச்சுமையைக் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான ஓய்வு மற்றும் உடற்தகுதி மீட்புப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் ஆட்டத்திறனை அடுத்தடுத்த போட்டிகளிலும் சீராக வைத்திருக்க முடியும்.

விளையாட்டுத் துறையை மேம்படுத்த வீரர்களுக்கு இணையாக சிறந்த பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள், விளையாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தேவை. இதற்காக, தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மற்றும் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் கல்வி மற்றும் தேசிய அளவிலான சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட உள்ளன. இது தேசிய கல்வி கொள்கை 2020 இன் நோக்கங்களுடன் இணைந்ததாக பார்க்கப்படுகிறது.

விளையாட்டு அறிவியலை கேலோ இந்தியா 3.0 திட்டத்தின் மையப் புள்ளியாக வைப்பதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ள திறமையான வீரர்களும் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் பயிற்சிகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. முறையான திட்டமிடலும், தொடர்ச்சியான உழைப்பும் இணையும் போது, இந்திய விளையாட்டுத் துறை எதிர்காலத்தில் புதிய உச்சங்களைத் தொடும் என்பதில் சந்தேகமில்லை.