📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Australia Tamil August 01, 2026 01:32 PM

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதே எனது வாழ்நாள் லட்சியம்.. பிரபல ஆஸ்திரேலிய வீரர் கருத்து

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதே எனது வாழ்நாள் லட்சியம்.. பிரபல ஆஸ்திரேலிய வீரர் கருத்து

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதே எனது வாழ்நாள் லட்சியம்.. பிரபல ஆஸ்திரேலிய வீரர் கருத்து

சிட்னி: அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி மிகவும் பிஸியான கால அட்டவணைக்கு தயாராகி வரும் நிலையில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர்களை வெல்வதை தனது அடுத்த கட்ட இலக்காக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் நிர்ணயித்துள்ளார்.

இக்காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிரான வெளிநாட்டுத் தொடர்கள் மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் ஆஷஸ் தொடர் உட்பட குறைந்தது 20 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாட திட்டமிட்டுள்ளது.

35 வயதான ஹேசில்வுட் இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், இந்தியா அல்லது இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அவர் ஒருமுறை கூட இடம்பெற்றதில்லை. ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2001-ல் இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை வென்றது. அதே நேரத்தில் இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் கடைசி டெஸ்ட் தொடர் வெற்றி 2004-ல் கிடைத்தது.

இதுகுறித்து பேசிய ஜோஷ் ஹேசில்வுட், "எங்கள் அணியின் பெரும்பாலான வீரர்கள் நீண்ட காலமாக ஒன்றாக விளையாடி வருகிறோம். இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் எப்போதுமே மிக முக்கியமானவை. நான் தென்னாப்பிரிக்காவிலும் இதுவரை தொடரை வென்றதில்லை. எனவே, வரவிருக்கும் இந்த மூன்று வெளிநாட்டுத் தொடர்களையும் வெல்ல வேண்டும் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கும், ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு பெரிய சவாலாகும்."

"நடப்பு பயிற்சிகளின் போது இதுவே எங்களை முன்னோக்கி செலுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. மனதின் ஓரத்தில் இந்த எண்ணம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. மிகவும் சவாலான இந்த டெஸ்ட் தொடர்கள் அனைத்தும் வெளிநாடுகளில் நடப்பவை என்பதால் கடினமான போட்டி இருக்கும். எனினும் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு இலக்கை அடைவோம் என்று நம்புகிறேன்."

"நானும் போலண்டும் எட்ஜ்பாஸ்டனில் 2023 ஆஷஸ் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இணைந்து விளையாடியுள்ளோம். அவருடன் இணைந்து மேலும் பல போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். எங்கள் இருவரின் பந்துவீச்சு பாணியில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், நுணுக்கங்களில் நிறைய வேறுபாடுகள் உள்ளன" என்று ஜோஷ் ஹேசில்வுட் கூறினார்.

காயங்களால் கடந்த ஆஷஸ் தொடரைத் தவறவிட்ட ஹேசில்வுட், தற்போது மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பும் நம்பிக்கையில் உள்ளார். அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டால், கடந்த 13 மாதங்களில் அவர் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாக இது இருக்கும். அவரது டெஸ்ட் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக நீண்ட இடைவெளி இதுவே ஆகும். ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டார்வினில் தொடங்க உள்ளது.