இடைப்பாடி தொகுதியில் விஜய் அறிவித்து மாயமான தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
இடைப்பாடி தொகுதியில் விஜய் அறிவித்து மாயமான தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
சேலம்:தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியின் தவெக வேட்பாளராக அருண்குமார் என்பவரை விஜய் அறிவித்தார். இதையடுத்து அருண்குமார் வேட்பாளராகவும், அவரது மனைவி மாற்று வேட்பாளராகவும் தவெக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது, வேட்பு மனுவை முறையாக பூர்த்தி செய்யவில்லை என்று அருண்குமார் மற்றும் அவரது மனைவியின் வேட்பு மனுக்கள், தேர்தல் நடத்தும் அலுவலரால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அருண்குமார் அங்கிருந்து மாயமானார்.
இதைதொடர்ந்து இடைப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு, இடைப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு அளித்தது. தேர்தலில் தவெக ஆதரவு அளித்த வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முன்னாள் அதிமுக நிர்வாகியான அருண்குமார் அதிமுகவிடம் விலை போன காரணத்தால் வேண்டுமென்றே வேட்புமனுவை முறையாக பூர்த்தி செய்யவில்லை. சூழ்ச்சியால் தான் இடைப்பாடி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டோம் என்று தவெகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சென்னையில் நடந்த இறுதி கட்ட பிரசாரத்தில் இதுகுறித்து விஜய் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினரும், இடைப்பாடி தொகுதியில் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருமான அருண்குமார் நேற்று அதிமுக பொதுச்ெசயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இதுகுறித்து அருண்குமார் கூறுகையில், தவெகவில் மனசங்கடங்கள் இருந்தது. இதனால் அக்கட்சியில் இருந்து விலகி இருந்தேன். தற்போது மரியாதை நிமித்தமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்தேன். தவெகவினர் கூறுவது போல், நான் யாரிடமும் பணம் எதுவும் வாங்கவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன்,’’ என்றார்.