இடைதேர்தலில் ஸ்டாலின் போட்டி? திருச்சி கிழக்கா ? துறைமுகமா ?
இடைதேர்தலில் ஸ்டாலின் போட்டி? திருச்சி கிழக்கா ? துறைமுகமா ?
தி.மு.க. பார்க்காத வெற்றிகளும் இல்லை, தோல்விகளும் இல்லை' என்கிறார் ' அக்கட்ச்யின் தலைவர் ஸ்டாலின். உன்மைதான்.... அதேசமயம், ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தோல்வியின் புண், 75 நாட்களைக் கடந்தும் ஆறாமல் தி.மு.க.வினர் மத்தியில் கடும் வேதனையை தந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஒரே அருமருந்து, மீண்டும் அவரை எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் அனுப்புவதுதான் என ஸ்டாலினைச் சார்ந்தவர்கள் சிலர் தீவிர முயற்சிகளில் இறங்க, 'இது வில்லங்க விளையாட்டு' என உதயநிதி தரப்பு தடுப்பதுதான் அறிவாலயத்தை அலைக்கழிக்கும் அரசியல் சடுகுடு!
இதுகுறித்த உள்விவரங்கள் அறிந்த திமுக சீனியர் தலைவர் ஒருவரிடம் பேசினோம். *தேர்தலுக்கு முன்பே, ஸ்டாலின் திருவாரூரில்தான் போட்டியிட வேண்டும் என அவருக்கு நெருக்கமான சிலர் வலியுறுத்தினார்கள். ஆனாலும், சேகர்பாபு மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் நான்காவது முறையாக கொளத்தூரை தேர்வுசெய்தார் ஸ்டாலின், ஆனால் நடந்தது வேறு. அங்கு வரலாற்று தோல்வியை தழுவினார் ஸ்டாலின். இதன்பிறகு ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட சலசலப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரும் சேகர்பாபுவை வறுத்தெடுத்தனர்.
இதற்கிடையே விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படவே, அத்தொகுதியில் ஸ்டாலின் நிற்க வேண்டும் என திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட்டால், லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்வோம்' என தி.மு.கவினர் பொங்கினார்கள். ஆனால், ஸ்டாலின் பதில் எதுவம் சொல்லவில்லை.
இந்நிலையில்தான் முதல்வர் விஜய் ’எங்க, உங்கப்பாவை காணோம்’ என சட்டசபையில் ஸ்டாலினை சீண்டினார். அதோடு நிற்காமல். கரூர் நிகழ்ச்சியில், 'கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசியதற்கே கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள்’ என்று சொல்லி மீண்டும் ஸ்டாலினை சீண்டினார். இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் குடும்பத்தினர் மீண்டும் இது தொடர்பான விவாதத்தை தொடங்கியிருக்கின்றனர். அப்படி சமீபத்தில், நடந்த பேச்சின்போது சேகர்பாபு, 'நான் தற்போது ஜெயித்திருக்கும் துறைமுகம் தொகுதி. தி.மு.கவின் கோட்டை இங்கு பர்சனலாக எனக்கு 60 ஆயிரம் வாக்காளர்களைத் தெரியும். எனவே, தலைவர் இங்கு போட்டியிடவேண்டும். அவர் போட்டியிடுவதாக இருந்தால் வெற்றி நிச்சயம் நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.
அப்போது இன்னொரு விவகாரமும் விவாதிக்கப்பட்டது. அதாவது, 1983ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேலவை உறுப்பினராக இருந்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி இதனால் 1984ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. அது மட்டுமே கருணாநிதி போட்டியிடாத ஒரே தேர்தல் அதே நிலை இப்போது உருவாகக் கூடாது என ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தனர்.
ஆனால், இதற்கெல்லாம் உதயநிதி மட்டும் சம்மதிக்கவில்லை. 'விஜய் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதற்காக அதையே ஒரு தனிப்பட்ட ஈகோவாக எடுத்துக்கொண்டு இடைத்தேர்தலில் தலைவர் போட்டியிடுவது சரியாக இருக்குமா?" கடந்த தேர்தலில் சீனியர்களின் பேச்சைக் கேட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு தராமல் பழைய முகங்களையே இறக்கிவிட்டோம். அதுதான் நமக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்திருக்கிறது.
இடைத்தேர்தலில் நாம் ஜெயித்தால் டபுள் ட்ரீட்தான். ஒருவேளை த.வெ.க. வெற்றிபெற்றுவிட்டால் வெளியே நாம் தலைகாட்ட முடியாது. இனி நாம் தவெகவை சாதாரணமாக எடை போட முடியாது. இப்போது கூட்டணியும் நம்மிடம் இல்லை. ஆட்சி, அதிகாரம். கூட்டணி என பன்முக பலத்தோடு த.வெ.க. தேர்தலை சந்திக்கும்.
தோல்வி நமக்கு புதிதல்ல என சொல்லிக்கொள்ளலாம். ஆனால், கட்சி தோற்ற பிறகு இரண்டாம் கட்ட தலைவர்கள்கூட பொதுவெளியில் தப்பித்துவிடுவார்கள். சாதாரண தொண்டனால் தலை காட்ட முடியுமா? காலம் கனியும்வரை காத்திருப்போம். தலைவர் சொல்வதுபோல் த.வெ.க ஆட்சி கவிழ்ந்தால் இரண்டில் ஒன்று போட்டு பார்த்துவிடலாம்' என அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
ஆனால், இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் நேருவோ, 'கவலை வேண்டாம். ஆட்சிதான் த.வெ.க கையில். அதிகாரிகள் இன்னமும் லோக்கல் தி.மு.க.வினர் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறார்கள். எனவே திருச்சி கிழக்கு, துறைமுகம் என இரண்டு தொகுதியிலும் ஒரே நேரத்தில் தலைவர் போட்டியிட வேண்டும். இதில், திருச்சியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தலைவருக்கு என்னால் வெற்றியை தேடித்தர முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
இப்படியான அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்ட ஸ்டாலின், பதில் எதுவும் சொல்லவில்லை. ரிஸ்க் எடுக்கலாமா, வேண்டாமா என்பதே இப்போதைக்கு அவரது யோசனை. இந்த விவகாரத்தில் இன்னொரு பேச்சும் ஓடுகிறது. அதாவது, இன்றைக்கு விஜய் VS உதயா என்ற அரசியல் ட்ரெண்ட் செட் ஆகிவிட்டது. இந்நிலையில், ஸ்டாலின் வெற்றிபெற்று சட்டசபைக்குள் நுழைந்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவி அவருக்கு சென்றுவிடும் ஆனால், இதை ஸ்டாலினே விரும்பவில்லை. காரணம் விஜய்யை ‘மாண்புமிகு முதல்வர்' என சபையில் அழைப்பது தன் சீனியாரிட்டிக்கு ஒத்துவராது என நினைக்கிறார். எனவே ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது ஒதுங்கிக்கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது" என சொல்லி முடித்தார்.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். 'தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்து மக்கள் குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஒருவேளை அவர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தால், எந்த தொகுதியில் நிற்பது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். தலைவர் ஸ்டாலின்தான் இதுகுறித்து பரிசீலித்து உரிய முடிவை அறிவிப்பார்" என்றார்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி... ஸ்டாலினுக்கு எல்லா பக்கங்களிலும் இடி!
- குமுதம் செய்திகளுக்காக கு.கணேஷ்குமார்.