📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 24, 2026 05:34 AM

இத்தனை பிரச்னைகளா! கைரேகை பதிவு செய்வதில்... ரேஷன்கடை ஊழியர்கள் அவதி

இத்தனை பிரச்னைகளா! கைரேகை பதிவு செய்வதில்... ரேஷன்கடை ஊழியர்கள் அவதி

கோவை: ரேஷன் கார்டில் பெயருள்ள அனைவரும் தங்களது கைரேகையை 31க்குள் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இவ்வாறு பதிவு செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், கடை ஊழியர்கள் தவியாய் தவிக்கின்றனர்.

ஒவ்வொரு ரேஷன் கடையிலும் குறைந்தபட்சம் 150 உறுப்பினர்களின் கைரேகை ‘அப்டேட்’ செய்யப்படாமல் இருக்கிறது. அவர்களது மொபைல் போன் எண்களுடன் கடைக்காரர்களுக்கு பட்டியல் கொடுக்கப்பட்டது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு, கடைக்கு வரச்சொல்லி, ‘அப்டேட்’ செய்கின்றனர்.

வயதானவர்கள், குழந்தைகளின் கைரேகை பதிவதில் சிரமம் உள்ளது. சானிடைசரால் கையை கழுவ வைத்து, பதிவு செய்கின்றனர்.

பெருவிரல் பதிவாகவில்லை எனில், ஆட்காட்டி விரல் அடுத்த இடது கை விரல்கள் என ஏதேனும் ஒரு விரல் ரேகையை பதிவேற்றுகின்றனர். அதிலும் சிரமம் ஏற்பட்டால், கருவிழி ஸ்கேனர் மூலமாக பதிவேற்றம் செய்கின்றனர்.

ரேஷன் கார்டு, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆதாரில் பதிவான ரேகை, தற்போது பதியப்படும் ரேகையும் சரியாக இருந்தால், பச்சை நிற ‘டிக்’ வருகிறது.

கைரேகை பதிவு செய்யாமல் இருப்பவர்களில் சிலர், உயிரிழந்து உள்ளனர். அவர்களிடம் இறப்பு சான்றிதழ் நகல் கேட்கச் சொல்கின்றனர்.

கார்டுதாரர்கள் இறப்பு சான்றிதழ் இல்லை என கூறுகின்றனர். சிலர் வெளியூரிலும், சிலர் வெளிமாநிலங்களிலும், சிலர் வெளிநாடுகளிலும் வேலைபார்க்கின்றனர்.

சிலர் குடும்பத்துடன் வெளியிடங்களில் வசிக்கின்றனர்; ரேஷன் கார்டு மட்டும் நம்மூர் முகவரியில் இருக்கிறது. இது போன்றோர் ரேகையை பதிவு செய்ய முடிவதில்லை.

சில இடங்களில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் பிரிந்து வாழ்கின்றனர். மனைவியின் ரேகை பதிவு செய்ய, அவர் வருவதில்லை.

தங்க நகை தொழிலாளர்கள் சிலர், தங்களது குடும்பத்துடன் கேரளத்துக்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர். கார்டு முகவரியில் யாருமே இல்லை என்பது, கடை ஊழியர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோல், ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமாக பிரச்னை எழுந்திருக்கிறது.

‘உண்மையான கார்டுதாரர்களா, உறுப்பினர்கள் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை அறியவே ரேகை பதிவு செய்யச் சொல்கின்றனர். அவகாசத்துக்கு பின்பும் ரேகை பதியாமல் இருந்தால், கார்டுகளை கருப்பு பட்டியலில் சேர்த்து, பொருட்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். பாதிக்கப்படுவோர் நேரில் வருவர். குடிமைப்பொருள் தாசில்தார் சம்மதித்த பின், பொருட்கள் கொடுக்க அனுமதிக்கலாம்’ என ஆலோசனை சொல்கின்றனர், ரேஷன் கடை ஊழியர்கள்.