இது ஒரு கானல் நீர் பட்ஜெட்
இது ஒரு கானல் நீர் பட்ஜெட் - திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் விமர்சனம்...
சென்னை: மாற்றத்திற்கான அரசு என கூறிவிட்டு பட்ஜெட்டில் மாற்றம் ஏதும் இல்லை என சட்ட பேரவையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கூறி இருக்கிறார். தவெக அரசின் முதல் பட்ஜெட், கானல் நீர் போல உள்ளதாகவும் எம்எல்ஏ மார்க்கண்டேயன் விமர்சித்து உள்ளார்.
பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், நானும் தேடிப் பார்க்கிறேன். இந்த பட்ஜெட்டில் புதிய நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. இது ஒரு கானல் நீர் பட்ஜெட். தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களையும் நீங்கள் ஏற்று கொண்டுள்ளீர்கள். எங்களுடைய திட்டங்களையே தொடர்ந்து செயல்படுத்தி வருகிறீர்கள். ‘மாற்றத்திற்கான அரசு’ என்று கூறிவிட்டு, திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றியிருப்பதுதான் த.வெ.க. அரசின் சாதனை” என்று குறிப்பிட்டார். மார்க்கண்டேயன் பேசி கொண்டிருக்கும் போது சபாநாயகர் குறுக்கிட்டு பொதுவெளியில் முதல்வரை கடுமையாக விமர்சித்தது குறித்து அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, உரிமைகுழுவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ள தகவலை தெரிவித்தார்.
அப்போது எழுந்து பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகள் இடம்பெறுவது வழக்கமான ஒன்று. அதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்தால், அது நீதிமன்றத்திற்குச் சென்று சட்டப்படி தீர்ப்பு வழங்கப்படும். அதேபோல், சட்டமன்றத்தில் பேசப்பட்ட கருத்துகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில், அதற்கு சபாநாயகருக்கும் உரிமைக்குழுவிற்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், ஒரே விவகாரத்திற்கு இரண்டு விதமான தண்டனைகள் வழங்குவது இதுவரை இல்லாத நடைமுறையாகும் என்றார்.
பின்னர் பேசிய எம்எல்ஏ மார்க்கண்டேயன் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர், "முதலமைச்சரை இவ்வளவு கடுமையாக விமர்சித்திருக்கக் கூடாது; இனி முதல்வரைப் பற்றி கடுமையான வார்த்தைகள் பயன்படுத்த கூடாது' என்று என்னிடம் அறிவுறுத்தி உள்ளனர். எனவே என்னை அறியாமல் வெளிப்பட்ட அந்த வார்த்தைகளை அருள் கூர்ந்து மறந்துவிட வேண்டும் என்று அவையில் கேட்டு கொண்டார்.