📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 01:04 PM

“இடம் மாறியது பரவாயில்லை; அதற்காக துதிபாட அவசியமில்லை”

“இடம் மாறியது பரவாயில்லை; அதற்காக துதிபாட அவசியமில்லை”

சென்னை: அதிமுகவிலிருந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுகவிலும், செங்கோட்டையன் தவெகவிலும் இருக்கின்றனர். இந்நிலையில் கட்சி மாறிய பின்னர் இருவரும் தத்தம் சட்டைப்பையில் வைத்திருக்கும் புகைப்படம் குறித்து சட்டப்பேரவையில் இன்று விவாதித்த விதம் கவனம் ஈர்த்துள்ளது. இதில் அமைச்சர்கள் ராஜ் மோகன், ஆதவ் அர்ஜுனாவும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்தனர்.

தவெக தலைமையிலான அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான பேரவை விவாதத்தில் முன்னாள் முதல்வரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, தனது கருத்துகளை முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும், அமைச்சருமான செங்கோட்டையன், “தமிழகமே பாராட்டிக் கொண்டிருக்கும் தூய ஆட்சியை பற்றி ஏமாற்றத்தை உருவாக்குகிற ஆட்சி என்று நீங்கள் (ஓபிஎஸ்) குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது. நீங்கள் இடம் மாறி இருக்கிறீர்கள் பரவாயில்லை. அதற்காக இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

“அந்த இடத்தை அவர்தான் முதல் முதலில் மாற்றியவர் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்” என்று அதற்கு ஓபிஎஸ் பதில் அளித்தார்.

இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் குறுக்கிட்டு பேசினார். “முன்னாள் முதல்வர் (ஓபிஎஸ்) பேசும்போது, இடத்தை முதலில் மாற்றியவர் நமது அமைச்சர் (செங்கோட்டையன்) என்றார்.

ஆனால், பாருங்கள் என்ன ஆச்சரியம் என்றால், அவர் இடத்தை முதலில் மாற்றிய போதும், அவரது இதயத்தின் அருகே உள்ள அந்த நிழற்படத்தை மாற்றவே வேண்டாம் என சொல்லியவர் எங்கள் தலைவர் (முதல்வர் விஜய்). ஆனால், அண்ணனின் (ஓபிஎஸ்) சட்டைப் பையை பார்க்கும் போது இடமும் மாறி இருக்கிறது, இதயமும் மாறி இருக்கிறதோ என்று தோன்றுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

“அமைச்சர் செங்கோட்டையன் இடம் மாறி இருக்கலாம். ஆனால், இன்னும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம்தான் அவரது சட்டைப் பையில் உள்ளது. ஆனால், ஜெயலலிதாவால் முதல்வராக அமர்த்தப்பட்டவர், இன்று அவரது சட்டைப் பையில் யாருடைய படம் உள்ளது” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் என இருவரும் அதிமுக-வில் இணைந்து பயணித்தவர்கள். கடந்த தேர்தலுக்கு முன்னதாக இருவரும் அக்கட்சியில் இருந்து விலகினர். இதில் செங்கோட்டையன், தவெக-வில் இணைந்து, தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக-வில் இணைந்து சட்டப்பேரவை உறுப்பினராகி உள்ளார்.