"இவ்ளோ தோல்விகளுக்கு பின்னும் கம்பீர் தப்பிப்பது எப்படி? பல நாடகங்கள்..".. சபா கரீம் விமர்சனம்
"இவ்ளோ தோல்விகளுக்கு பின்னும் கம்பீர் தப்பிப்பது எப்படி? பல நாடகங்கள்..".. சபா கரீம் விமர்சனம்
மும்பை: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணி அடைந்த படுதோல்விகளுக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும், ஆனால் அவருக்குப் பதிலாக உதவிப் பயிற்சியாளர்களை பலிகடா ஆக்குவது ஏன் என்றும் முன்னாள் தேசிய தேர்வுக் குழு தலைவர் சபா கரீம் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இதுபற்றி சபா கரீம் பேசுகையில், இந்திய அணியின் தோல்விக்குக் காரணமானவர்களைத் தப்பிக்க வைக்கும் பிசிசிஐ-யின் அணுகுமுறை பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உதவி பயிற்சியாளர் ரியான் டெஸ்கோட் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஆகியோரின் ஒப்பந்தங்களை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சபா கரீம், "ஒரு அணி தோற்கும்போது தலைமை பயிற்சியாளரைத் தப்பிக்க விட்டு, மற்ற உதவிப் பயிற்சியாளர்களைப் பலிகடா ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "வெற்றி பெறும்போது அதன் பெருமைகளைத் தட்டிச் செல்லும் தலைமை பயிற்சியாளர், தோல்வி ஏற்படும் போது மட்டும் ஏன் பொறுப்பேற்பதில்லை? கவுதம் கம்பீர் தனது உதவிப் பணியாளர்களிடம் இருந்து சரியான வேலை வாங்கத் தவறியுள்ளார். எனவே, முதலில் கம்பீர் மீதுதான் பிசிசிஐ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
கால்பந்து விளையாட்டில் அணி மோசமாக விளையாடினால் முதலில் தலைமை பயிற்சியாளர் தான் பதவி விலகுவார் அல்லது நீக்கப்படுவார். ஆனால், நமது கிரிக்கெட் அமைப்பில் அவரைப் பாதுகாப்பதற்காகப் பல நாடகங்கள் அரங்கேறுகின்றன. சில நேரங்களில் கேப்டன்கள் மாற்றப்படுகிறார்கள், ஆனால் பயிற்சியாளர் அப்படியேதான் இருக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
தற்போது இந்திய அணி உலகக்கோப்பையைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. இதனால் வீரர்கள் மத்தியில் ஒருவித பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்றும், இதற்குத் தலைமை பயிற்சியாளர் சரியாகச் செயல்படாததே காரணம் என்றும் சபா கரீம் குற்றம் சாட்டியுள்ளார்.