ஜாகீர் கான் பற்றி 2012
ஜாகீர் கான் பற்றி 2012-இலேயே சொன்ன தோனி.. சிஎஸ்கே பயிற்சியாளர் தேர்வுக்குப் பின் பரவும் பேச்சு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 18 சீசன்களாக தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் சில மாதங்கள் முன்பு பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு சிஎஸ்கே அணியை வழிநடத்த ஜாகீர் கான் தேர்வாகியுள்ளார். இந்த நிலையில், ஜாகீர் கானை பற்றி தோனி பேசிய பழைய பதிவு ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது, ஃபார்மில் இல்லாத ஜாகீர் கான் மீது பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய அப்போதைய இந்திய கேப்டன் தோனி, ஜாகீர் கானுக்கு ஆதரவாக மிக அழுத்தமான கருத்தைப் பதிவு செய்தார்.
அப்போது தோனி கூறுகையில், "ஒரு பந்துவீச்சாளர் சரியாக வீசாத போது அவரை எளிதாகக் குறை சொல்லி விடுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்திய வேகப்பந்து வீச்சின் சச்சின் டெண்டுல்கர் ஜாகீர் கான் மட்டுமே. பல ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சை முன்னின்று வழிநடத்திய மாபெரும் வீரர் அவர்" என்று பாராட்டி பேசினார். தோனி அவ்வாறு கொண்டாடிய அதே ஜாகீர் கான், தற்போது 2027 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே-வின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் தோனியுடன் கைகோர்க்க உள்ளார்.
தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நிர்வாகி ரூபா குருநாத் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு, நன்கு பழகிய ஒரு இந்தியரையே பயிற்சியாளராக நியமிக்க விரும்பியது. அதன்படி தோனியின் தீவிர விருப்பத்தின் பேரிலேயே ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அரங்கில் 100 போட்டிகளில் ஆடிய அனுபவமும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் வழிகாட்டியாகச் செயல்பட்ட முதிர்ச்சியும் கொண்டவர் ஜாகீர் கான். அவரது வருகை, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கலவையான பார்வையை பெற்றுள்ளது. 2027 ஐபிஎல் தொடர் துவங்கிய பின்னரே இந்த முடிவு சரியா என்பது தெரிய வரும்.