📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 07, 2026 03:34 PM

ஜனநாயகன் பார்த்து பாலியல் தொல்லையை சொன்ன சிறுமி.. கைதான வெறியன்.. விஜய் பேசிய வசனம் நல்லது செஞ்சுருக்கு

ஜனநாயகன் பார்த்து பாலியல் தொல்லையை சொன்ன சிறுமி.. கைதான வெறியன்.. விஜய் பேசிய வசனம் நல்லது செஞ்சுருக்கு

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியானது. பகவந்த் கேசரியின் ரீமேக்காக உருவாகியிருந்த அந்தப் படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க விஜய் அந்தப் படத்தில் பேசிய வசனத்தை பார்த்துவிட்டு; தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையை சிறுமி வெளியே சொல்லியிருக்கிறார். அதனையடுத்து அந்த பாலியல் வெறியன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

விஜய்யை வைத்து அவரது கடைசி படமான ஜனநாயகனை இயக்கினார் ஹெச்.வினோத். பல சிக்கல்களை கடந்த 23ஆம் தேதி படம் ரிலீஸானது. ஏற்கனவே இணையத்தில் லீக்கான திரைப்படத்தை தியேட்டர்களில் பார்ப்பதற்கும் கூட்டம் அதிகளவில்தான் இருந்தது. படத்துக்கு விஜய் ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை வழக்கம்போல் கொடுத்துவிட்டார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. பகவந்த் கேசரி ரீமேக்கை தெலுங்கு ஸ்டைலிலேயே எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது.

படத்தில் இருந்த பாசிட்டிவ்: அதேசமயம் படத்தில் பாசிட்டிவ் விஷயங்களும் இல்லாமல் இல்லை. பெண்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கக்கூடாது என்ற கருத்தையும், குழந்தைகளிடம் குட் டச் பேட் டச் குறித்து விஜய் பேசிய விஷயங்களையும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. குட் டச் பேட் டச் விஷயத்தை விஜய் பேசும்போது அதற்கான வீரியம் இன்னும் அதிகமாகும். அவரை ஃபாலோ செய்யும் குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் அத்துமீறல்களை தடுக்கவோ அல்லது வெளியே தைரியமாக சொல்வதற்கோ இது பயன்படும் என பலரும் நினைத்தார்கள்.

நினைத்தபடியே: நினைத்தபடியே நடந்திருக்கிறது. அதாவது சென்னையில் கோடம்பாக்கத்தில் இருக்கும் பெரியன் என்பவருடைய வீட்டில் எட்டு வயது சிறுமியும் அவரது தாயும் தங்கியிருந்திருக்கிறார்கள். தாய் அந்த வீட்டிலேயே தங்கி வீட்டு வேலைகளை செய்து வந்திருக்கிறார். ஆனால் அந்த பெரியன் என்ற பாலியல் வெறியன் சிறுமியிடம் அத்துமீறியிருக்கிறான். குழந்தை இதை வெளியே சொல்வதற்கு அச்சப்பட்டு உள்ளே வைத்துக்கொண்டு புழுங்கியிருக்கிறது.

ஜனநாயகன் படம் பார்க்க சென்ற சிறுமி: இதற்கிடையே தன் தந்தையையும் அவ்வப்போது சந்திக்கும் வழக்கத்தில்; சில நாட்களுக்கு முன்பு தந்தையை பார்க்க சென்றிருக்கிறார் சிறுமி. இரண்டு பேரும் சேர்ந்து விஜய்யின் ஜனநாயகன் படத்தை பார்த்திருக்கிறார்கள். அதில் குழந்தைகளிடம் விஜய் பேசும் குட் டச் பேட் டச் வசனத்தை பார்த்துவிட்டு தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை தந்தையிடம் சொல்லியிருக்கிறார்.

கைதான வெறியன்: அதை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக ஆர்-8 வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையிலும், சிறுமியின் வாக்குமூல அடிப்படையிலும் அந்த வெறியன் பெரியன் கைது செய்யப்பட்டிருக்கிறான். இந்த விஷயம் பெரும் பரபரப்பை அந்தப் பகுதியில் ஏற்படுத்தியது. சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருக்கும் ஒரு நடிகர் நல்ல விஷயத்தை பேசினால் அது என்ன மாதிரியாக வேலை செய்யும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பலரும் இயக்குநர் வினோத், நடிகர் விஜய் ஆகியோருக்கு தங்களது பாராட்டையும் தெரிவித்துவருகிறார்கள். மேலும் இதை முன்னுதாரணமாக கொண்டு முன்னணி நடிகர்கள் இதுபோன்ற நல்ல விஷயங்களை திரையில் சொல்ல வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.