ஜனநாயகத்தை காக்க சிறு கூட்டமும், ஜனநாயகன் படத்தை காக்க ஒரு கூட்டமும் போராடுகிறது; இயக்குநர் அமீர் ஆவேசம்
ஜனநாயகத்தை காக்க சிறு கூட்டமும், ஜனநாயகன் படத்தை காக்க ஒரு கூட்டமும் போராடுகிறது; இயக்குநர் அமீர் ஆவேசம்
பாஜக சமத்துவத்திற்கு எதிரான கட்சி, ஆனால் தமிழ்நாடு அரசு ஏன் மாணவர்களை அடிக்கிறீர்கள் என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published : July 24, 2026 at 3:22 PM IST
சென்னை: நாட்டின் ஜனநாயகத்தை காக்க இங்கு சிறு கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் ஜனநாயகன் படத்தை காக்கவும் இங்கு ஒரு கூட்டம் போராடி கொண்டு இருக்கிறது என நடிகர் அமீர் விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும், நீட் தேர்விற்கு எதிராகவும் NO MORE NEET என்னும் தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு நீட் தேர்விற்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
அப்போது நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும், திரைப்பட இயக்குநருமான பா.ரஞ்சித் பேசியபோது, "நீலம் மாணவர் அமைப்பின் முதல் நிகழ்ச்சியாக இந்த போராட்டத்தை நாம் முன்னெடுத்து இருக்கிறோம். Gen Z தலைமுறையினரை சரியாக அரசியல் படுத்தாததால்தான், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக நாம் மாற்றாமல் விட்டுவிட்டோம். தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் நீட் மரணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நீட் முறைகேட்டிற்கு எதிராக போராடும்போது அம்பேத்கரின் பெயரால் அனைவரும் சமமாக போராடுகிறார்கள். கல்வி அமைப்பின் மோசமான முறைதான் நீட் தேர்வு. நீட் தேர்வு சமத்துவத்திற்கு எதிரானது. அதனால் தான் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பாஜக, மாணவர்கள் போராடுவதை ஒடுக்குகிறது. ஏனெனில், பாஜக சமத்துவத்திற்கு எதிரான கட்சி.
ஆனால் தமிழ்நாடு அரசு ஏன் மாணவர்களை அடிக்கிறீர்கள்? பேட்ஜ் கூட இல்லாமல் அடிக்க நீங்கள் கோழைகளா? தமிழகத்திற்கு 8 தலித் அமைச்சர்களை கொடுத்திருக்கிறோம். ஆனால், வன்னியரசு தவிர மற்றவர்கள் யாராவது மக்கள் பிரச்சனைகளுக்காக பேசி இருக்கிறார்களா?
இந்த அரசு, அதிகாரிகளின் அரசாக தான் செயல்பட்டு வருகிறது. மாணவர்களை அடிப்பதை முதலமைச்சர் விஜய் வேடிக்கை பார்க்கிறாரா? மாணவர்கள் போராடுவதற்கு நீங்களே ஒரு இடத்தை ஏற்படுத்தி கொடுங்கள் முதல்வரே?
சென்னையில் மாணவர்கள் போராட்டத்தில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அதை ஏன் கட்டுப்பாட்டோடு வைக்க வேண்டும். ஏன் மெரினாவை மூட வேண்டும்? மக்களோடு சேர்ந்து இருக்கும் முதல்வராக நீங்கள் இருக்க வேண்டும் என்பதைதான் நாங்கள் விரும்புகிறோம்.
மாணவர்கள் போராட்டத்திற்கு செவிசாய்த்து, அவர்கள் பாதுகாப்பாக போராட இடத்தை கொடுக்க வேண்டும். நீட்டை வெறும் வாய் வார்த்தையாக மட்டுமின்றி, எங்களுடன் சேர்ந்து நீங்களும் எதிர்த்து போராட வேண்டும். நீட்டை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “ஒரு நாட்டில் மாணவர்கள் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் அந்த நாட்டில் உள்ள மற்ற அமைப்புகள் சரியில்லை என்று அர்த்தம். மாணவர்கள் போராட்டம் மத்திய அரசின் தோல்வி. மாணவர்க்ளின் இந்த போராட்டம் நீட் ஒழிப்பாக மாற வேண்டும். Ban NEET ஆக மாற வேண்டும்.
நீட் மூலம் நம்மிடமிருந்து அறிவை முழுவதும் எடுப்பது தான் மத்திய அரசின் செயல்பாடாக இருக்கிறது. நீட் தடைக்கு நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என்று பேசினார்.
இதையடுத்து, இயக்குநர் அமீர் பேசுகையில், “இந்த நாள் தமிழகத்தின் முக்கியமான நாள். நாட்டின் ஜனநாயகத்தை காக்க இங்கு சிறிய கூட்டம் போராடுகிறது. அதே வேளையில் ஜனநாயகன் படத்தை காக்கவும் ஒரு கூட்டம் போராடுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த கூட்டம் அதை விட சிறியதாக இருக்கலாம். ஆனால் இது வெற்றி பெறும்.
அதிகாரத்தை எதிர்த்து ஒவ்வொரு முறையும் நிற்பது உங்களை போன்ற கூட்டம் தான். தமிழ்நாடு சிந்திக்கிற கூட்டம் என்ற பெயர் இப்போது இல்லை. அந்த கூட்டம் தியேட்டர் பக்கம் போய்விட்டது” என்று பேசினார்.
இவர்களை தொடர்ந்து பேசிய நடிகை ரேவதி, “நீட் தேவையா, அதை சரிசெய்வதா அல்லது தேவையில்லையா என்ற புரிதல் எனக்கு இல்லை. ஆனால் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
நம் குழந்தைகள் எல்லாம் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். நான் டாக்டராக ஆசைப்படுகிறேன். எனக்கு நீட் தடையாக இருக்கிறது. தயவு செய்து அடிக்காதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள். எங்கள் உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் மருத்துவ கனவுக்காக பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்கள்.
நல்ல விஷயங்களை எடுத்து பேசும் Gen Z க்கு பாராட்டுக்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் காவல்துறையினர் அடிக்க வரும்போது அவர்கள் தேசிய கீதம் பாடுகிறார்கள். எங்கள் தலைமுறை அதை செய்யவில்லை. ஆனால் Gen Z பேசுகிறார்கள். உங்களுக்கு உங்கள் பாதையை வகுக்க தெரியும். உங்களுக்கு தேவையான உதவியை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் கல்வியை விடாதீர்கள். கேள்வி கேளுங்கள். கேள்வி கேட்காமல் விடாதீர்கள்” என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து இயக்குநர் லெனின் பாரதி, நடிகர்கள் கலையரசன், மன்சூர் அலிகான், நடிகைகள் ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நீட் தேர்வுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை இந்த ஆர்பாட்டத்தில் தெரிவித்தனர்.