ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் சேவை இவ்வாண்டுக்குப் பதிலாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்படலாம், சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர், ஜோகூர் பாரு மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் சேவை (ஆர்டிஎஸ்) இவ்வாண்டு டிசம்பருக்குப் பதிலாக அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சேவையை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆர்டிஎஸ் ஆபரேஷன்ஸ் (ஆர்டிஎஸ்ஓ) இதனைத் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமைப்புகளின் சோதனைகளும் சோதனை ஓட்டங்களும் முடிவடையும் என்று அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.
இருந்தாலும் மூன்றாம் தரப்பு பாதுகாப்புச் சான்றிதழ், பிற ஒப்புதல்களைப் பெறுவதற்கான நேரத்தைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்கான ரயில் சேவை தற்போது 2027 பிப்ரவரியில் தொடங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அது கூறியது.
முன்னதாக, இந்த ரயில் பாதையின் திறப்பு விழா டிசம்பர் 2026 இறுதியில் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இச்சேவையை இயக்குவதற்கான உரிமையை வழங்கும் அமைப்புகளாகச் சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையமும் மலேசியாவின் போக்குவரத்து அமைச்சும் உள்ளன.
அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பிப்ரவரி 2027ல் சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் குறித்து ஆர்டிஎஸ்ஓ தங்களிடம் தெரிவித்துள்ளதாக இரு அமைப்புகளும் தெரிவித்தன.
ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகார் நிலையத்திற்கும் சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திற்கும் இடையிலான 4 கி.மீ. தூர இணைப்பு ரயிலுக்கான உள்கட்டமைப்புப் பணிகள் பெருமளவில் முடிவடைந்துள்ளன. அவை, திட்டமிட்டபடி சரியாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆர்டிஎஸ் இணைப்புக்கான பாதுகாப்புச் சான்றிதழ், இறுதி ஒழுங்குமுறை ஒப்புதலை ஆர்டிஎஸ் பெறுவதைப் பொறுத்தே மாற்றப்பட்ட காலக்கெடு அமையும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இத்திட்டத்தைச் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் நிறைவேற்ற ஆர்டிஎஸ் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்று இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.