📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil September 18, 2026 04:31 PM

ஜோகூர் தமிழவேள் துயிலகத்தில் பெருந்திரளானோர் அஞ்சலி

ஜோகூர் தமிழவேள் துயிலகத்தில் பெருந்திரளானோர் அஞ்சலி

சிங்கப்பூர்-மலேசியத் தமிழர்களின் பெருந்தலைவரும் தமிழ் முரசு இதழின் நிறுவனருமான தமிழவேள் கோ. சாரங்கபாணி, 1974ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி இயற்கை எய்திய பின்னர் சுவா சூ காங் இடுகாட்டில் அப்போது அவருக்கு நினைவகம் எழுப்பப்பட்டது.

பின்னர், 2018ஆம் ஆண்டு குடும்பத்தினரின் விருப்பப்படி நினைவகம் அங்கிருந்து அகற்றப்பட்டு அவரது அஸ்தியின் ஒரு பகுதி திருமதி சாரங்கபாணியின் (லிம் பூன் நியோ) அஸ்தி இருக்கும் தேவாலய மாடத்தில் இணைத்து வைக்கப்பட்டது.

அஸ்தியின் இன்னொரு பகுதி தமிழவேள் நற்பணி மன்றத்தின் பாவலர் சோ. வீ.தமிழ்மறையானின் பாதுகாப்பில் இருந்தது.

தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் விழா, 2024 மார்ச் 16ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதே நாள் பிற்பகலில் தமிழவேளின் அஸ்தி ஜோகூர் மாநிலத் தமிழர் சங்கத்தின் பொறுப்பாளர் ந. வேணுகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜோகூர் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு, மலேசியா ஜோகூர் மாநிலம் ஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ‘கெபுன் தே இந்து மின்’ இடுகாட்டில் துயிலகம் தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) காலை 11 மணியளவில் ‘தமிழவேள் துயிலகம்’ பொதுமக்கள் அஞ்சலிக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

தமிழவேள் நற்பணி மன்றம், தமிழறிஞர் அ.சி.சுப்பய்யா இலக்கிய அறக்கட்டளை, மலேசியா-சிங்கப்பூர் இலக்கிய உறவுப் பாலம், மலேசியா ஜோகூர் மாநிலத் தமிழர் சங்கம் ஆகிய நான்கு அமைப்புகளோடு சிங்கப்பூரையும் மலேசியாவையும் சேர்ந்த தமிழ் வள்ளல்கள், வணிகப் பெருமக்கள், இலக்கிய ஆர்வலர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோ.சா. துயிலகத்தில் பெருந்திரளான தமிழ் அன்பர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரிலிருந்து தமிழவேள் நற்பணி மன்றத்தின் தலைவர் வீ. ராஜாராம், ஆலோசகர்கள் திரு.ப.தியாகராஜன் (முன்னாள் தலைவர்), பாவலர் சோ. வீ. தமிழ் மறையான், செம்மொழி இதழாசிரியர் எம். இலியாஸ், தமிழ் ஆர்வலர் ஜெயராம், பாவலர் வெள்ளியூரன் அப்பண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஜோகூர் மாநிலத் தமிழர் சங்கத் தலைவர் ந. வேணுகோபால், தமிழ்ச்சுடர் இராம சேதுபதி, தமிழ்நெஞ்சர் கே. புருஷோத்தமன், இஸ்கந்தர் புத்ரி மஇகா தொகுதித் தலைவர் சங்கரபாண்டியன், திருமதி கோ. ஜெயா, திரு மா.சிவமணி, முனைவர் சு.ரவி, கல்விச்செம்மல் நடராஜா சி. காளிமுத்து, மலேசியத் தமிழ் இளையர் மணி மன்றப் பேரவையின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் க.மு.கிருஷ்ணன், பிரபல எழுத்தாளர் கே. ஏ. குணா, மலேசிய நண்பன் செய்தியாளர் எம். கே. வள்ளுவன், தமிழ்ச்சிகரம் ந. தமிழ்வாணன், ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த புண்ணியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதன்பின், ஸ்கூடாய், (தாமான் நேசா) தாமான் மாணிக்கவாசகம் மண்டபத்தில் துயிலகத் திறப்புவிழா நிகழ்ச்சியின் இரண்டாவது அங்கம் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் திரளாக அதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திரு ந. வேணுகோபால் வரவேற்புரையாற்றினார். தமிழவேளைப்பற்றி மாணவர் ஒருவர் உரை நிகழ்த்தினார். மணிமன்றம் தயாரித்தளித்த தமிழவேளைப் பற்றிய காணொளி திரையிடப்பட்டது.

தமிழவேள் தொடர்பான போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்குப் பரிசு வழங்கப்பட்டது.

மேடையருகே, ஜோகூர் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி ஆசிரியை நாகேஸ்வரி, ‘தமிழவேள்’ உருவக் கோலம் வரைந்திருந்தார். இக்கோலம் வருகை தந்தோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்றே கூறலாம்.

முனைவர் தமிழ்மணி சி.வடிவேலு ‘தூயோர்க்கொரு துயிலகம்’ என்ற தலைப்பிலான கவிதையை உயிரோட்டத்துடன் வாசித்தார்.

தமிழவேள் துயிலகம் அமையக் காரணமான சிங்கப்பூரின் திரு சோ.வீ.தமிழ்மறையான், தமிழவேள் பற்றி ‘தமிழவேள் சாரங்கபாணி’ என்ற நூல் எழுதிய திரு எம்.இலியாஸ் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சுவையான விருந்து உபசரிப்பைச் சங்கத்தினர் வழங்கினர்.

நினைந்து அன்பில் நிறைந்தவர்கள்

உடன்பிறவாச் சொந்தங்களைப்போலத் தமிழ் ஆர்வலர்கள் கூடித் தமது தந்தைக்கு மரியாதை செய்ததற்கு ஆழ்ந்த நன்றியுடன் இருப்பதாகத் தமிழவேளின் 86 வயது மகள் ராஜம் சாரங்கபாணி தெரிவித்தார்.

“கடல் கடந்து உறையும் கோ.சா. துயிலகத்தைப் பற்றிச் சிங்கப்பூரிலுள்ள பலர் அறிந்திராதபோதும் அவரது பங்களிப்பு இன்றளவும் நினைவுகூரப்படுவதை எண்ணி மகிழ்கிறேன்,” என்று அவர் கூறினார்.

தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் 1974ல் மறைந்த நாளில் இருந்தே, அவரோடு பணியாற்றியவர்களும் சமூகத் தலைவர்களும் ஆண்டுதோறும் அவருடைய நினைவைப் போற்றி வந்துள்ளதாகத் திரு தமிழ்மறையான் குறிப்பிட்டார்.

ஜோகூர் ராஜ மாரியம்மன் கோயில் நிர்வாகம், ஜோகூர் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு தமிழவேளின் அஸ்தியை ஜோகூருக்குக் கொண்டுவந்து நிரந்தரமாக நிலைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“ஜோகூர் சிங்கப்பூருக்கு மிக அருகில் இருப்பதால், தமிழவேள்மீது மதிப்பும் அன்பும் கொண்டவர்கள் எளிதாகச் சென்று அஞ்சலி செலுத்த முடியும்; அவருடைய இந்த நினைவிடம் உலகமும் வையகமும் இருக்கும் வரை நிலைத்து நின்று அவருடைய தியாகத்தையும் பங்களிப்பையும் நினைவுகூறும்,” என்று அவர் நெகிழ்ந்தார்.

செய்தி : எம். இலியாஸ்