📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 30, 2026 01:30 PM

ஜப்பான் நிலநடுக்கம்; உயிரிழப்பு அதிகரிப்பு, உல‌க‌ம் செய்திகள்

ஜப்பான் நிலநடுக்கம்; உயிரிழப்பு அதிகரிப்பு, உல‌க‌ம் செய்திகள்

யாட்சு‌ஷிரோ: தென்மேற்கு ஜப்பானை உலுக்கிய மோசமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 28ஆக அதிகரித்துள்ளது.

பேரிடருடன் தொடர்பிருக்கக்கூடிய சம்பவங்களில் பலியானோரும் அவர்களில் அடங்குவர். ஜப்பானிய அரசாங்கத்தின் முன்னணிப் பேச்சாளர் வியாழக்கிழமை இத்தகவலைத் தெரிவித்தார்.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 6.30 மணி நிலவரப்படி மரண எண்ணிக்கை 28ஆகப் பதிவாகியுள்ளதாக மூத்த அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா செய்தியாளர் கூட்டத்தின்போது கூறினார்.

யாட்சு‌ஷிரோவில் பாதிப்பு

ரிக்டரில் 7.1 அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதில் சிறிய நகரான யாட்சு‌ஷிரோவில் விடுகள் கவிழ்ந்ததுடன் சாலைகளில் பிளவு ஏற்பட்டது. எனினும், கண்ணுக்குத் தெரியும் அபாயங்களைவிட வெப்பம் வாட்டும் கோடைக்காலத்தில் நீர், மின்சாரப் பற்றாக்குறை போன்றவற்றால் இருக்கும், வெளிப்படையாகத் தெரியாத அச்சுறுத்தல்கள் கூடுதல் கவலை தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை நகரான யாட்சு‌ஷிரோவில் வியாழக்கிழமை கிட்டத்தட்ட 58,000 வீடுகளில் நீர், மின்சார விநியோகம் இல்லாமல் போனது. குமாமோட்டோ மாநிலத்தை நிலநடுக்கம் உலுக்கி இரண்டு நாள்களுக்குப் பிறகும் இந்நிலை தொடர்கிறது.

நிலநடுக்கத்தால் மோசமாகச் சேதமடைந்துள்ள நீர் முறைகளைச் சரிசெய்ய நாள்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகுமா என்பது தெரியவில்லை என்று நிவாரணப் பணிகளை வழிநடத்துபவர்களில் சிலர் தெரிவித்தனர். கோடைக்கால வெப்பத்தால் குறிப்பாக நீர்ப் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருப்பதாக அவர்கள் சுட்டினர்.

ஆலை, கடைத்தொகுதிச் சம்பவங்களில் பலர் பலி

நிலநடுக்கத்துக்குப் பலியான 28 பேரில் பெரும்பாலானோர் நிப்போன் பேப்பர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆலை, குமாமோட்டோவில் உள்ள ஏயினோன் கடைத்தொகுதி ஆகியவற்றில் இருந்தவர்கள் என்று குமாமோட்டோ மாநில அரசாங்கம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் அந்த ஆலை பெரும் சேதத்துக்கு உள்ளானது. ஏயியோன் கடைத்தொகுதியில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்கின்றன. எனினும் வார இறுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதால் மக்கள் வெப்பத்தாக்கத்துக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக குமாமோட்டோ அரசாங்க அதிகாரி ஒருவர் எச்சரித்தார்.