ஜூரோங்கில் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட மூத்தோருக்கு உதவும் புதிய திட்டம்
ஜூரோங் வட்டாரத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய், கல்லீரல் அழற்சி நோய், இதயச் செயலிழப்பு உள்ளிட்ட முற்றிய உறுப்புச் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்ற பிறகு கூடுதல் ஆதரவைப் பெறவிருக்கின்ற்னர்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிமுகம் செய்யப்பட்ட புதிய திட்டத்தின்கீழ், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப்படும் நோயாளிகளைப் பணிநிறைவு பெற்ற தாதியர்களும் பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்களும் அவர்களது வீட்டிற்கே சென்று தொடர்ந்து கண்காணிப்பதுடன் உடல்நலத்தையும் கவனித்துக்கொள்வர்.
நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 60 நாள்களுக்குள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதே திட்டத்தின் நோக்கம்.
புதிய முயற்சி பராமரிப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் ஜூரோங் ஈஸ்ட், பூன் லே ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 10,000 மூத்தோருக்கு ஆதரவளிக்கும்.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் நடைபெற்ற ‘லவிங் ஹார்ட் கம்யூனிட்டி டே’ நிகழ்ச்சியில் ‘கேர் கனெக்ட் ஹப்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துவைத்துப் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, புதிய திட்டம் மருத்துவமனைகளில் கூடுதலான இடவசதியை ஏற்படுத்துவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு வளங்களை மாற்றிவிட உதவும் என்றார்.
மூத்தோர் அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரிலேயே அதிக எண்ணிக்கையிலான மூத்தோரைக் கொண்ட முதல் ஐந்து வட்டாரங்களில் ஜூரோங் ஈஸ்ட்டும் ஒன்று என்பதைச் சுட்டிய ஃபூ, பராமரிப்பு வசதிகளை வீட்டிற்கு அருகிலேயே கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அது உணர்த்துகிறது என்றார்.
இரண்டு மாதச் சோதனைக்கு இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘கேர் கனெக்ட் ஹப்’ திட்டம், மருத்துவமனையிலிருந்து ஓய்வுபெற்ற அனுபவம் வாய்ந்த தாதியர்களைச் சேவையில் ஈடுபடுத்துகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அந்தத் தாதிகள் அபாயம் நிறைந்த நோயாளிகளைக் கண்டறிந்து திட்டத்தில் இணைத்துவிடுவதுடன் மருந்துகள் குறித்தும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்தும் நோயாளிகளுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி சமூகத்தில் உள்ள பராமரிப்புத் தேர்வுகளை அணுக உதவுவர்.
‘இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையும் ‘லவிங் ஹார்ட்’ பல சேவை நிலையமும் இணைந்து கேர் கனெக்ட் ஹப்’ திட்டத்தை நடத்துகின்றன. அதன்கீழ், 25 ‘லவிங் ஹார்ட்’ தொண்டூழியர்கள் சமூகப் பராமரிப்பாளர்களாகப் பணியாற்றப் பயிற்சி பெறுவர்.
அந்தத் தொண்டூழியர்கள், ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ள அதிக ஆபத்துள்ள நோயாளிகளின் வீடுகளுக்குத் தவறாமல் சென்று, அவர்களின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து நாள்பட்ட நோய்களின் ஆரம்பகட்ட அறிகுறிகளைக் கண்காணிப்பர்.
மேலும், மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தவறாமல் செல்லவும் நோயாளிகளை அவர்கள் ஊக்குவிப்பர்.